9/13/2016

அதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவராஜா காலமானார்.

1950.03.18இல் வாழைச்சேனையில் பிறந்தவர். வியாபாரமானி பட்டதாரியாகி ஆசிரிய சேவையில் இணைந்த இவர் - தொடர்ந்து அயராது பல பாடசாலைகளில் கற்பித்து... வந்ததோடு - வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் அதிபராய் பொறுப்பேற்று கல்லூரி வரலாற்றில் நீங்க முடியாத நற்பணி புரிந்தார்.

நாட்டில் நிலவிய அசாதாரண போர்ச்சூழலில் பல அச்சுறுத்தல்களுக்கும் அபாயங்களுக்கும் மத்தியில் பணியாற்றி எண்ணற்ற மாணவர்களின் நாயகனாக விளங்குகிறார். 
தமிழ்-ஆங்கிலம்-சிங்களம் என மும்மொழிகளிலும் பரிச்சியம் மிக்க இவர். தனது வாழ்க்கையில் நேரந்தவறாமையினை மிகக் கடினமான நிலையிலும் கடைப்பிடித்தவர். வாழைச்சேனை மண்ணின் மீது மாறாத நேசம் கொண்ட இவர்--- தனது மாணவர்களுக்கு வரலாற்றுணர்வினையும் சுதேசப் பற்றினையும் ஊட்டி வந்துள்ளார்.

சிறந்த பேச்சாற்றல் மிக்க அமரர்.மு.தவராஜா அவர்கள் கிழக்கிலங்கை மண்ணின் முக்கியமான சிறுகதைப் படைப்பாளியாகவும் விளங்குகிறார். மறுபக்கம், மறைமுகம் என்கின்ற இவருடைய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் அதற்குச் சான்று பகர்கின்றன.

வாழைச்சேனையிலிருந்து ஓய்வுபெற்று மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய பின்னர். அவரது பணி பரந்து பட்டளவில் விரிவடைந்தது. அக்கம் பக்கத்து இளைஞர்கள் இவரிடம் ஆங்கிலம் கற்றதோடு - இவரது சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டு வயது வித்தியாசமின்றி இவருக்கு நண்பர்களானார்கள். ஆன்மீகம் - சமூகம் - கலை, இலக்கியம் எனப் பலதரப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து தன்னாலான பணிகளைச் செய்தார்.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவராகவும் விளங்கி பல பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்ட இவர்... அதன் தொடர்ச்சியாக வாழைச்சேனை மண்ணிலும் “தமிழ்-கலை, இலக்கிய மன்றம்“ உருவாகி பல தமிழ்ப் பணிகளை புரிவதற்கு ஊக்கம் தந்ததோடு, அது செயற்பட முடியாது தடுமாறிய பொழுதுகளிலெல்லாம் மட்டக்களப்பிலிருந்து இங்கு வந்து பலரையும் சந்தித்து தொடர்ந்து செயற்பட உந்துதல் அளித்தார்.
தன்னுடைய வாழ்வோடு பிணைந்த - வாழைச்சேனை மண்ணின் வரலாற்றினையும் எழுதி வெளியிட வேண்டும் என்கின்ற அவா இவரது இறுதிக்காலத்தில் மேலோங்கி இருந்தது. அது முற்றுப் பெற முன்னரே அவர் நம்மை விட்டுப் பிரிந்தது வாழைச்சேனை மண்ணுக்கே பேரிழப்பாகும். மனிதர்களை விட்டுப் பிரிந்து தன் மண்ணுக்கே தன் உடலை தானம் செய்துவிட்டார்.

0 commentaires :

Post a Comment