11/24/2016

பாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம் விடுபடவேண்டும்


*எம்.ஏ.எம் முர்ஸித்* .
Afficher l'image d'origine

சுமார் 33 வருடங்களுக்கு மேலாக நாம் ஏதோ ஒருவகையில் அரசியல் மடையர்களாகவே ஆக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும் அதன் முதல் அரை காலப்பகுதி பயங்கரவாதச்சூழல், முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் , உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் உயரிய அதிகார சபையான பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்களுக்கான தனித்துவ அரசியல் அடையாளத்துடனான குரலுக்கான தேவை இருந்தது.

இதன் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. அதனை அடிமட்ட மக்கள் கூட கண்ணீரும், செந்நீரும் சிந்தி அதை வளர்த் தெடுத்தனர். ஆனாலும் பின்னைய காலப்பகுதியில் இஸ்தாபகர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து வந்து தலைமையை கையில் எடுத்த அமைச்சர் ஹக்கீம் அவர்களால் முஸ்லிம் அரசியல் களம் தடம்புரட்டப்பட்டது,

இது ஹக்கீம் எனும் தனிமனித இருப்பிற்காகவும், அவரது ஆசா பாசங்களுக்காகவும் அறிந்தும் அறியாமலும் நடந்த சம்பவங்களாகவே கருதமுடியும், அன்றைய காலகட்டத்தில் மு.கா வின் கடிவாளமாக இருந்த கலாநிதி இனாமுல்லா மசூதின் உட்பட பலரது வெளியேற்றம், தாருசலாம் சொத்துவிவகாரம், பேரியல் அஷ்ரப் -அமான் அஸ்ரப் விவகாரம் மட்டுமல்லாமல் "இது எனது தனிப்பட்ட விடயம்"என்று முஸ்லிம் சமுதாய தலைமையாக இருந்த கட்சியின் தலைமை அமைச்சர் ஹக்கீமினாலும் அவரின் ஜால்ராக்களாலும் மூடி மறைக்கப்பட்ட விடயங்கள் போன்றவைகளால் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டன.

காலப்போக்கில் முஸ்லிம்கள் மத்தியில் தங்களின் ஏகவோக அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் நிலை மாறி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கட்சிகள் தோற்றம் பெற்றன.


அதன் தொடர்ச்சியில்   அரசியல் அதிகாரம் தொடர்பிலும் அபிவிருத்தி தொடர்பிலும் உரிமைகள் தொடர்பிலும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக செயல்படக்கூடிய இன்னுமொரு புதியஅரசியல் போக்கு அவசியமாகியுள்ளது. அது பாசாங்கு , பசப்பு வார்த்தைகள் கலந்த  அரசியல் தெரிவிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தை முன்நிறுத்தி மக்களுக்காக சேவைகளை செய்யக்கூடிய பிரதிநிகளை தெரிவு செய்யும்  வண்ணம் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை முஸ்லிம் அரசியலின் இதயமாக பார்க்கப்படும் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தியை ஏனைய பகுதிகளின் அபிவிருத்திகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் இவ்வளவு காலமும் சிலரது ஆடம்பர வாழ்க்கைக்கும், சல்லாபங்களுக்கும் அவற்றை தக்கவைத்துக் கொள்வதற்குமாக பயன்படுத்தப்பட்ட- பயன்படுத்தப்படுகின்ற பகடைக்காய்களாகவே கையாளப்படுகிறோம் என்பது தெட்டத்தெளிவாக தெரியக்கூடிய விடயமாகும்.

அமைச்சர் ஹிஸ்புல்லா தனி மனிதராக நின்று காத்தான்குடி நகரை அபிவிருத்தி செய்த அளவில் , அமைச்சர் ரிசாட் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், அபிவிருத்தி தொடர்பிலும் செயற்பட்ட அளவில் முஸ்லிம் மக்களின் பேரியக்கம் என்று கூறப்படும் கட்சி, அதன் 4 மாகாண சபை உறுப்பினர்கள், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், அதி சக்திவாய்ந்த கெபினேட் அமைச்சர், சர்வதேச அரங்கில் இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய தலைமை என்ற முகமூடி, எல்லாவற்றுக்கும் மேலாக பேரம் பேசும் சக்தி என பல ஆயுதங்கள் இருந்தும் அடிக்கல் நாடகங்களை தவிர சமூக உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பெரிதாக ஏதும் நடந்தபாடில்லை.

வருகின்றன தேர்தல்களிலாவது கடந்தகால பாட்டு அரசியல் போன்ற பாரம்பரிய மாமுல் அரசியல் சிந்தனையில் இருந்து விடுபட்டு,கடந்தகால கசப்பு உதாரணங்களை படிப்பினையாகக் கொண்டு மாற்று அரசியல் சிந்தனையை முன்நிறுத்தி சரியான தெரிவுகளை மக்கள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறான அரசியல் மறுமலர்ச்சி சிந்தனைக்கு இளைஞர்கள் மூலகாரணமாக அமைவது குறித்த மறுமலர்ச்சி நீடித்த ஆரோக்கியத் தன்மையுடனான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.


0 commentaires :

Post a Comment