5/24/2017

ஞானமும் இல்லை, சாரமும் இல்லை!

ஞானமும் இல்லை, சாரமும் இல்லை!
Image associée


சண்டாளர்களோடு நீ வந்தாலென்ன,
சண்ட மாருதம் போல் இரைந்தால்தானென்ன?
எச்சில் வழியும் உன் காட்டுக் கூச்சலில் ...
ஞானமும் இல்லை, சாரமும் இல்லை.
உன்னில் வீரமும் இல்லை.

வெறும் சாரைப் பாம்பு நீ.
கருநாகம் போல் ஏன்
பொய்யாய்ப் படமெடுத்து ஆடுகிறாய்?
சட்டம் உன் கைகளை இறுக்கும்
நேரமொன்று நெருங்கி வரும்.
பெட்டிக்குள் அடங்கிடுவாய் பாம்பே,
அப்போது நீ கிளப்பிய புழுதியும் அடங்கி விடும்.
சட்டம் எப்படிப் போனாலென்ன,
காலம் உன்னைக் கசக்கி விடும்.
கந்தல் ஆடையாய்க் கிழிந்து
குப்புற நீ விழுந்து கிடப்பாய்
வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்.
ஈ, காக்கை கூட உன்னை
அண்டாது அப்போது.
யாரின் மகுடிக்கு ஆடுகிறாய் பாம்பே?
எய்தவனிருக்க அம்பை நோவானேன்
என்றிருந்தேன் இத்தனை நாளும்.
எல்லாவற்றையும் மீறி,
இன்று வார்த்தைகள் சிந்தி விட்டன.
உன்னை உரைத்த, உன்னை எழுதிய
வாயையும் கையையும்
கழுவிக் காயப் போட்டால்தான்
பிராயச்சித்தம் கிடைக்கும் எனக்கு.

சிராஜ் மஷ்ஹூர்.
24.05.2017
*நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment