7/17/2017

எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில் விபுலானந்தர்

தமிழ் வளர்த்த இலங்கை சமயப்பெரியார்களுள் சுவாமி விபுலானந்த அடிகளார் விசேடமானவர். இவரைப் பற்றி அலசி ஆராய்வதென்பது ஆழியை கடப்பதற்கு ஒப்பானதாகும். ஆனால் அளவிட முடியாத அறிவுக்கும் ஞானத்துக்கும் உடமையாளரான இம்முத்தழிழ் வித்தகர் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும் என்றால், நிச்சயமாக விடையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.Résultat de recherche d'images pour "விபுலானந்தர்"
சைவசமயத்தில் உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் அதனை கற்பிக்கும் பேராசியர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், எமது நாட்டில் வாழும் ஏனைய தமிழ் மாணவர்களுக்காக பாடப்புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களில் மட்டுமே சுவாமி விபுலானந்தர் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஆரம்பகாலத்திலேயே,இலங்கையில்தமிழ்,இசை,சமயம்,விஞ்ஞானம்,அறிவியல்,பல மொழிகளென பல்துறைகளிலும் ஆளுமை பெற்ற ஒரு தமிழ் மகான் வாழ்ந்துள்ளார் என்பது தமிழ் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் விடயமாகும். அப்படிப்பட்ட ஒருவரின் ஆளுமை,திறமை மற்றும் அரும்பணிகள் பற்றி ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால், இந்த அவசர உலகில் நாமாக ஆசைபட்டாலும்கூட விபுலானந்தர் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து வாசிக்க எமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனை நன்கு புரிந்து கொண்டவர்களாக, காலத்துக்கு ஏற்ற வகையில் விபுலானந்தரை மக்களிடம் கொண்டு செல்லும் அணுகுமுறையை 'அரங்கம்' நிறுவனத்தார் முன்னெடுத்துள்ளனர்.

இவ்வருடம் விபுலானந்தரின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு கனடாவைச் சேர்ந்த பாபு வசந்தகுமாரின் தயாரிப்பிலும் ரகுலன் சீவகனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திலும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம் வெளிவரவுள்ளது. இது, நிச்சயமாக பார்ப்போர் மனதில் விபுலானந்தரின் ஆளுமையையும் புகழையும் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையை எம்மிடையே ஏற்படுத்தியுள்ளது. 'அரங்கம்' இலண்டனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இதன் ஸ்தாபகர்களான துக்ஷ்யந்தன் சீவகன் மற்றும் ரகுலன் சீவகன் ஆகியோர் இலங்கை மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் இலை மறை காயாகவுள்ள பல விடயங்களை ஆவணப்படங்களாக தயாரித்து புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்றனர்..

அதில் போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், கணவன் அல்லது தந்தையை இழந்து குடும்பத்தை தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள், முன்னாள் போராளிகள், லண்டன் கோயிலொன்றால் மட்டக்களப்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமம் பற்றிய அரங்கத்தின் படைப்புக்கள் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் பாராட்டை தட்டிக்கொண்டவையாகும்.

விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப் படப்பிடிப்பில் களமிறங்கியுள்ள 'அரங்கம்' நிறுவனத்தின் உறுப்பினரான திருமதி. பரமேஸ்வரி சீவகன் மற்றும் அதன் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் ஆகிய இருவரையும் தினகரன் ஆசிரியர் பீடத்தில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.

ஆவணப்படம் தயாரிக்க எத்தனையோ தலைப்புக்கள் இருக்கும்போது ஏன் இந்த விபுலானந்தர்? என்ற கேள்வி எல்லோரையும் போலவே எனக்குள்ளும் தோன்றியது. அக்கேள்விக்கான பதிலை பாபு வசந்தகுமார் சுவாரஸ்யமாக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
நான் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவன். இப்பாடசாலை சுவாமி விபுலானந்தரால்ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆங்கிலப் பாடசாலையாகும். தமிழ் பேசும் ஏழைப் பிள்ளைகளுக்காக சுவாமிகள் இப்பாடசாலையை உருவாக்கியிருந்தார். நான் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்தேன். இதனால் சுவாமிகளின் வழிகாட்டலில் வளர்க்கப்பட்டேன்.அதனாலோ என்னவோ அவர் மீது அளவு கடந்த பக்தியும் மரியாதையும் எனக்குள் ஏற்பட்டது. பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் எனது கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் விபுலானந்தரின் நூற்றாண்டு சபை ஆகியவற்றில் நான் உறுப்பினராக செயற்படுகிறேன். நான் புலம் பெயர்ந்து கனடா சென்றபோதும்கூட அங்கே இயங்கும் சுவாமி விபுலானந்தா கலை மன்றத்தில் உறுப்பினர் ஆனேன்.
இந்த மன்றம் மூலம் தமிழ் பிள்ளைகளுக்கு விபுலானந்தர் பற்றிய பேச்சுப் போட்டி மற்றும் இசைப் போட்டிகளை நாம் நடத்தி வருகிறோம். விபுலானந்தரின் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு மெட்டு அமைத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இவ்வாறு எனது பணிகளை நான் தொடர்ந்து கொண்டிருந்தபோதே ஒரு தடவை பிபிசி தமிழோசையில் ஒலிப்பெட்டகம் நிகழ்வில் ஒலிபரப்பாளர் சீவகன் பூபாலரத்தினம் விபுலானந்தரின் பெருமைகளைக் கூறுவதை கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதனையடுத்து நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோதே ஒலி ஆவணத்தை ஒளி ஆவணமாக கொண்டு வரும் சிந்தனை என்னக்குள் தோன்றியது. என்றார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஏழாம் நாள் திருவிழாவன்று நல்லையா உடையார் குடும்பத்தினரின் உபயத்துடன் இந்த ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
ஆவணப்படத்தை தொகுத்து வழங்கும் திருமதி. பரமேஸ்வரி சீவகன், விபுலானந்த அடிகளாரின் ஆளுமை பற்றிய ஒரு சில வார்த்தைகளை தினகரன் வாசகர்களுக்காக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
விபுலானந்தரை வெறுமனே ஒரு துறவியாக மட்டும் பார்க்க இயாலாது. அவர் பல்வகை ஆளுமைகளை உடைய மகான். தமிழ். ஆங்கிலம்,வடமொழியென 09வகை மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். சிவானந்தா பாடசாலை உள்ளிட்ட பல தேசியப் பாடசாலைகளை இவர் ஏழை மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். சாதி,மதம் பாராது அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இவர் செயற்பட்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ்த் துறை பேராசிரியராகச் செயற்பட்டுள்ளார்.
மொழிகளைப்போன்றே இசை, நாடகத்துறைகளிலும் இவர் பல ஆய்வுகளை செய்துள்ளார். இத்தகைய அறிஞரைப் பற்றி எமது இளைய தலைமுறையினர் அறிந்து வைத்திராதது கவலைக்குரிய விடயமாகும். அவரது வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு இலகுவாக கொண்டு சேர்க்கும் முயற்சியிலேயே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. என்றும் விளக்கமளித்தார்.
இந்த ஆவணப்படம் லண்டன்,கனடா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றேகால் மணித்தியாலங்களைக் கொண்டுள்ள இந்த ஆவணப்படத்தில் விபுலானந்தரின் வரலாறு விளக்கப்படுகிறது. விபுலானந்தரை பிரதிநிதித்துவப்படுத்தும் மீள் உருவாக்கக் காட்சி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்கள் இந்த ஆவணத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்திய ஒலிப்பதிவுக் கலைஞர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் இலங்கையிலும் விபுலானந்தரின் தமிழ் மற்றும் இசையை கற்று வரும் மாணவர்கள், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள், விபுலானந்தரை குருவாக கொண்டவர்களென அனைவரதும் உரையாடல்களும் கருத்துக்களும் இந்த ஆவணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விபுலானந்தர் இந்தியாவில் யாழ்நூலை அரங்கேற்றிய சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவாமிகளைப் பற்றிய நான்கு தலைமுறையினரின் கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த ஆவணம் வெளிவருகிறது.
சுவாமிகளின் 'யாழ் இசை' நூல் மிகவும் அற்புதமானதொரு படைப்பாகும். அக்காலத்தில் அவர் தமிழிசையில் விஞ்ஞானத்தைப் புகுத்தியதன் விளைவாகவே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் மற்றும் குழலின் மகிமையை வெளிப்படுத்தும் இந்த நூலை சாதாரணமாக வாசித்து புரிந்துகொள்வதென்பது கடினமான விடயம். அதனை இலகுபடுத்தும் முயற்சியிலும் தற்போது பாபு வசந்தகுமார் களமிறங்கியுள்ளார். அதேபோன்று அக்காலத்தில் எழுந்த ஆங்கிலம் மற்றும் வடமொழி நாடகங்களுக்கு தமிழ் சிறிதும் சளைத்தது அல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் விபுலானந்தரால் இயற்றப்பட்ட 'மதங்க சூடாமணி' எனும் நூல் அவரது உச்சக்கட்ட ஆளுமையின் வெளிப்பாடு என்றும் திருமதி.பரமேஸ்வரி சீவகன் எம்மிடம் எடுத்தியம்பினார்.
காலம் மாறிவிட்டது. எழுத்துக்களைவிடவும் ஔிக்காட்சிகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கக்கூடியவை. ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கும் விபுலானந்தரின் வரலாற்றை இலகுவாகப் புரிய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே சுவாமிகளின் ஆளுமையை ஆவணமாக தொகுக்கத் தீர்மானித்தோம் என்றும் பாபு வசந்தகுமார் தெரிவித்தார்.
பல சிரமங்களுக்கு மத்தியிலும் இம்முயற்சியை விடாமல் முன்னெடுத்துச் சென்ற பெருமை பாபு வசந்தகுமாரையே சாரும். இது அவரது ஆரம்பம்.
இதில் குறை நிறைகள் இருக்கலாம். விவாத மேடைக்குச் செல்வதாயினும் கூட இதனை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பல தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆவணங்களாக வெளிவரவேண்டும் என்பதே எமது ஆசை என்றும் திருமதி பரமேஸ்வரி சீவகன் கூறினார்.
விபுலானந்தர் தமிழ் வளர்க்க தன்னை அர்ப்பணித்தார். இன்று மீண்டும் எமது சந்ததியினரிடையே தமிழ் மறக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் பழமையை புதிய வடிவில் மக்களிடையே கொண்டு சேர்க்க எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
நவீனயுகத்தில் தமிழுக்கும் மறைந்த சுவாமி விபுலானந்தர் அடிகளுக்கும் முன்னுரிமையளித்து மறைந்து கிடந்த வரலாற்றுக்கு உயிர் ஊட்டி அதனை உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்க்க பாபு வசந்தகுமார் எடுத்துள்ள இந்த முயற்சியை அரும்பணி என்று கூறுவதிலும் பார்க்க அறப்பணி என்று கூறுவதே மிகப் பொருத்தமாகும். அவரது பணிகள் மேலும் தொடர வேண்டுமென்பதே எமது அவா.


நன்றி *லக்ஷ்மி பரசுராமன், தினகரன் வாரமஞ்சரி

0 commentaires :

Post a Comment