10/25/2017

திருப்பெருந்துறை -அது சபிக்கப்பட்ட நிலம்....

அது சபிக்கப்பட்ட நிலம்....*தோழர் திலீப்குமார்
L’image contient peut-être : plein air

திருப்பெருந்துறையில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்பில் அண்மைக்காலமாக மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த விடயம் யாவரும் அறிந்ததே,
மட்டக்களப்பு நகரிலிருந்து 3km தொலைவில் அமைந்துள்ள இப் பிரதேசத்தில் 400க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன.
உரிய வகையில் குப்பைகள் அகற்றப்படாமையால் நீண்டகாலமாக துன்பம் அனுபவிக்கும் மக்கள் குப்பை மேட்டினை அங்கிருந்து முழுமையாக அகற்றுமாறும் கழிவுகளை வேறு இடத்திற்கு எடுத்து செல்லுமாறும் தமது கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

100மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படும்
இந்த திட்டம் எப்படி செயற்படுகிறதென்றால்
வவுசர் வண்டிகள் மூலம் கொண்டு செல்லப்படும் மலசலகூட கழிவுகள் திறந்த வெளியில் வீசப்படுகின்றன.
குப்பையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட நீரானது சிறிய வடிகான் மூலம் மட்டு வாவியில் கலக்கின்றது,
மழைக்காலத்தில் வடிகான் நிரம்பி மக்கள் குடியிருப்பு பகுதிகளிலேயே இத்தகைய கழிவு நீர் பரவுவதாக அறிய முடிகிறது,
குடிக்க முடியாத நிலையிலேயே நிலத்தடி நீர் மாசுபட்டுக் கிடக்கிறது,
பறவைகள் இஷ்டத்திற்கு கழிவுகளை காவிக்கொண்டு பறக்கின்றன
அவை இறுதியில் வீடுகளிலும் கிணறுகளிலுமே வந்து சேரும்,
வெறும் 10 அடி இடைவெளி வீதி ஒன்று தான் மக்கள் குடியிருப்பையும்
குப்பை மேட்டையும் பிரித்து நிற்கிறது,
சகிக்க முடியாத துர்நாற்றம் வேறு...L’image contient peut-être : plein air et nature

அண்மையில் குப்பை மேடு தீப்பற்றி தொடர்ச்சியாக சில நாட்கள் எரிந்த போது முழு ஊரும் சாம்பல் மண்டிக்கிடந்தது
நான் கூட தீப்பற்றி எரிந்த குப்பை மேட்டினை பார்வையிட்டு வந்து அன்றைய இரவு முழுவதும் மூச்செடுக்க கஷ்டப்பட்டேன்.
ஆனாலும் குப்பை மேட்டின் அருகில் வாழும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் அவஸ்தையான அந்த சூழலிலேயே படுத்துறங்கியிருப்பார்கள்.
கிராமசேவையாளர் அலுவலகம், பாலர் பாடசாலை போன்றவை இயங்குவதற்காய் அமைக்கப்பட்ட பொதுசனக்கட்டிடம் பொருத்தமற்ற சூழலால் கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கிறது, ஊரே வெறிச்சோடிக் கிடக்க  இது திருப்பெருந்துறையின் பிரச்சினை என்று இயல்பாய் கடந்து செல்கிறோம். அங்கு வாழ்பவர்களும் எங்களை போன்ற ஜனங்கள் தானே?
மட்டுவாவியின் தூய்மையும் அழகும் கெடுவதும்
உரிய பராமரிப்பற்ற அபாயகரமான குப்பை மேடு பொதுமக்கள் குடியிருப்பின் மத்தியில் அமைந்திருப்பதும் ஒட்டு மொத்த மட்டக்களப்பின் பிரச்சினை தானே?
நாம் வாழ்வதற்கும்  எமது குழந்தைகள் நின்மதியாய் உறங்குவதற்கும் ஆரோக்கியமான சூழல் இருக்கிறது. நமது வீட்டு குப்பைகள் அகற்றப்பட்டு திருப்பெருந்துறையில் வீசப்பட்டால் போதும்  என்று கருதுவது கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனமான மனோநிலை தவிர வேறொன்றுமில்லை.
அந்த மக்கள் அத்துமீறி குடியேறினார்கள் என்று சிலர் வாதிடக்கூடும்
அவர்கள் அறிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன்
மட்டு விமானப்படை தளத்திற்காக காணிகள் பாதுகாப்பு அமைச்சால் சுவீகரிக்கப்பட்டு 2நாட்களில் வெளியேற சொல்லி நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களும், வீரமுனை சிக்கல்களால் இடம்பெயர்ந்து
பின்னர் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சரான
அஷ்ரப் அவர்களால் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுமே
இங்கு பெரும்பான்மையாக வசிப்பவர்கள்.


இரண்டு கேள்விகள்

1.இங்கே குப்பையிலிருந்து பெருமளவில் பிரித்தெடுக்கப்படும்
பிளாஸ்டிக், காட்போட்,உலோகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள்
யாருக்கு என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது?
இது மூலம் பெறப்படும் வருமானம் மாநகர சபையில் கணக்கு காட்டப்படுகின்றதா?2.செங்கலடி கொடுவாமடுவில்
பல மில்லியன் ரூபாய் செலவில் நவீன முறையில் குப்பை சேகரித்து மீள் சுழற்சி செய்யும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு குப்பைகள் கொண்டு செல்லப்படும்போதும்  மட்டக்களப்பு மாநகர சபை மட்டும் ஏன் அப்படி செய்யாமல் திருப்பெருந்துறை பிரச்சினையினை நீடிக்கின்றது?


நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment