2/23/2018

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகளிடமிருந்து கடிதம்


எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு  தமிழ் மக்கள் விடுதலை புலிகளிடமிருந்து  கடிதம் ஒன்று இன்றைய திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. உள்ளுராட்சி  மன்றங்களில் ஒருமித்து செயல்படுவதன் அவசியம் குறித்து மேற்படி கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்தினை கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் ஒப்பமிட்டு அனுப்பியுள்ளதோடு இன்று மாலை ஊடகங்களுக்கும் அக்கடிதத்தின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.


கெளரவ.இரா.சம்பந்தன்(பா.உ)
(எதிர்க்கட்சி தலைவர்)
தலைவர்
(தேசிய கூட்டமைப்பு)

கெளரவ.இரா.சம்பந்தன்(பா.உ) அவர்களுக்கு,

ஐயா!

             "தமிழ்க்கட்சிகள்   ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக"                              

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் கிழக்கு,வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையான மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கட்சிகளிடையே  பெரும் இழுபறி நிலை தோன்றியுள்ளமை தாங்களும் அறிந்ததே.

அதனடிப்படையில்  மட்டக்களப்பு மாவட்டத்திலும்  மாநகரசபை உட்பட  ஏறக்குறைய எல்லா சபைகளிலும்  எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைப்பதற்கான சாதாரண பெரும்பான்மையற்ற நிலையே காணப்படுகின்றது.

வாகரையில் (கோறளை-வடக்கு) எமது கட்சியாகிய  தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்  (தலா ஆறு)  சமஅளவிலான  ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. வாழைச்சேனையிலும்(கோறளைப்பற்று) அதேபோன்று  எமக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் (தலா ஐந்து  சமஅளவிலான  ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. செங்கலடியில் (ஏறாவூர் பற்று) எமக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் (தலா எட்டு) சம அளவிலான ஆசனங்கள் கிடைத்துள்ளன. அங்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏழு ஆசனங்களை பெற்று  மூன்றாவது இடத்தில் உள்ளது.

                                                                                                                                                          மட்டக்களப்பு  மாநகரசபையில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய நாம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளோம்.
ஏனைய   ஐந்து சபைகளிலும் அதாவது ஆரையம்பதி'மண்முனைப்பற்று),வவுணதீவு(மண்முனை மேற்கு),பட்டிப்பளை(மண்முனை தென் மேற்கு),களுவாஞ்சிக்குடி(மண்முனை தென் எருவில் பற்று),போரதீவுபற்று  போன்ற இடங்களில் கூட எமது கட்சியானது  ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாக விளங்குகின்றது. இவை ஒன்றிலேனும்    தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனித்து ஆட்சியமைக்கும் நிலையில் இல்லை. இது பற்றிய அனைத்து விபரங்களையும் தாங்களும்  அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.இந்நிலைமைகளை  கருத்தில்கொண்டும் எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் பலவீனமடையா வண்ணமும்   முக்கியமான முடிவு ஒன்றினை எமது கட்சியானது எடுத்துள்ளது. அதாவது கொள்கை வேறுபாடுகளைக் கடந்து தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பு மூலம் உள்ளூராட்சி சபைகளை ஆளும் வல்லமையை பெற்றுக்கொள்ளும் அனைத்து முனைப்புகளுக்கும் நாம் ஆதரவு வழங்குவது என்பதே அதுவாகும். அதனடிப்படையில் எமது கட்சி நலன்களையும், பதவிகளையும்  விட எமது மக்களின் ஆட்சியதிகாரங்கள் உறுதித்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் நாம் பெரும் சிரத்தை கொண்டுள்ளோம்.

"கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இன்று எதிர் கொண்டுள்ள நில  நிர்வாக நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது" என்பதையே  நாம் நடந்து முடிந்த  உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் முன்வைத்து போட்டியிட்டோம்.  அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து நின்று போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்காக  42613 வாக்காளர்கள் தமது வாக்குகளை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் 36 உறுப்பினர்களை  எமது  கட்சியின்  சார்பில் எமது மக்கள் தெரிந்தெடுத்துள்ளனர்.

எனவே எமது மக்களின் இறைமைக்கு மதிப்பளித்து அத்தகைய தீர்வினை வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதன்பொருட்டு  தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் குறிப்பாக மட்டக்களப்பு  மாவட்டத்தில் உறுதிப்பாடுமிக்க பிரதேச சபைகளை உருவாக்கும் ஆணையினையும் அதற்கான பொறுப்பினையும் மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர் என்பதனை  தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

அந்த கருமத்தினை நிறைவேற்றும் பொருட்டே   பல சபைகளில் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்தோம். அந்தவகையில் எமது பகிரங்க அழைப்பினை தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களின் பின்னர்   தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு  நாம் விடுத்திருந்தோம். ஒற்றுமைக்கான இந்த எமது அழைப்பானது முழுக்க முழுக்க எமது மக்களின் நலன் சார்ந்தது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறி  வைக்க விரும்புகின்றோம்.

 எமது அந்த பகிரங்க அழைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிராந்திய தலைவர்களின் கட்சிவாதங்களுக்குள் சிக்குப்பட்டு  பொறுப்பற்ற முறையில் கையாளப்பட்டு விடுமோ என்கின்ற அச்சநிலை தற்போது எமது மக்களிடையே உருவாகி வருகின்றமையை   தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம்.

இதன் காரணமாகவே இந்த கடிதத்தினை தங்களுக்கு நேரிடையாக அனுப்பிவைக்க எண்ணினோம். நாம் மேற்குறிப்பிட்டவாறு வாழைச்சேனை,செங்கலடி போன்ற சிக்கலுக்குரிய  சபைகளில் நமது இரு கட்சிகளும் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் மக்களிடையே  உணரப்படுகின்றது. அங்குஎந்த ஒரு தமிழ் கட்சிகளும்  தேசிய கட்சிகளுடன்  கூட்டுச்சேர்ந்து     ஆட்சியமைக்க  வேண்டிய அவசியம் இல்லையென  அந்த பிரதேசமக்களும் புத்திஜீவிகளும் பரவலாக கருதுகின்றனர்.

அந்த வகையில்  வாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி ஒருவரை தவிசாளராகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரை பிரதி தவிசாளராகவும்,அதேபோல  செங்கலடியில்     தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரை  தவிசாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி ஒருவரை பிரதி தவிசாளராகவும் நமது கட்சிகள் இணைந்து ஆட்சியினை பொறுப்பெடுக்கலாம் என நாம் எண்ணுகிறோம். இதனது இறுதி தீர்மானங்களை ஒருமித்து பேசும் வாய்ப்பு கிட்டுமானால் நாம் அப்போது எடுத்துக்கொள்ள முடியும்.அதேபோல ஏனைய  சபைகள் தொடர்பாகவும்  முடிந்த வரையான விட்டுக்கொடுப்புகளுடன் பேச எமது கட்சிஎன்றும் தயாராகவுள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தர விரும்புகின்றோம்.

நாம் கடந்த காலங்களிலும் தங்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் எமது மக்களின் நலன் சார்ந்து இருமுறை வினையமான கோரிக்கைகளை விடுத்துவந்துள்ளோம்.ஆனாலும் அவை சாத்தியமாகவில்லை என்பது கவலைதரும் விடயமாகும்.ஏனெனில்  எமது கட்சியின் தலைவர் கெளரவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போது 2012ஆம்  ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று மாகாண சபைகளின் காணி  போலீஸ் அதிகாரங்களைப்பெற்றுக்கொள்ளுவதற்காக ஒருமித்து குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.ஆனால் அவ்வேளைகளில் நீங்கள் இந்த மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டிருக்காததன்  விளைவாகவோ என்னவோ அக்கடித்தத்துக்கு பதிலிருக்கும் குறைந்த பட்சமாக பதிலளிக்கக் கூட  தவறியிருந்தீர்கள்.

அதே போன்று 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட(நல்லாட்சி ) புதிய ஜனாதிபதி மாற்றத்துடன் கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டிய சூழல் உருவானது.அவ்வேளை தங்களது பிறந்தநாளான பெப்ரவரி-05ஆம் திகதியன்று தங்களை உங்களது கொழும்பு இல்லத்தில் சந்தித்து 34 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் பதினோரு உறுப்பினர்களைக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  வெறும்ஏழு உறுப்பினர்களைக்கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வந்தமையை வரவேற்க  முடியாத சூழலில்  அது ஜனநாயக விரோதமானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். அதற்கு மாறாக கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரில் ஒருவரே முதல்வராக நியமிக்கப்படவேண்டும் என்கின்ற கோரிக்கையை விடுத்திருந்தோம். அதற்கு வசதியாக திருகோணமலையிலுள்ள தங்களது வாசஸ்தலத்தில் கெளரவ உதுமாலெப்பை,கெளரவ.விமலவீர திசாநாயக்க போன்ற கிழக்கு மாகாண(முன்னாள் அமைச்சர்கள்)சபை உறுப்பினர்களையும் நேரிடையாகவே அழைத்துவந்து  தங்களுடன்உரையாடினோம்.அவர்களுடன் இணைந்து எமது கட்சி  சார்பில் இருந்த மூன்று உறுப்பினர்களுடைய நிபந்தனையற்ற ஆதரவினையும்  தருவதற்கான ஒப்புதலை நேரிடையாகவே எமது தலைவர் கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தங்களுக்கு வழங்கியிருந்தார் என்பதை இவ்விடத்தில் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

ஆனாலும் எமது கோரிக்கைகளை புறம்தள்ளி முஸ்லீம் காங்கிரசுக்கு ஜனநாயக விரோதமான முறையில் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவியை வழங்கியிருந்தீர்கள்.அந்த காய் நகர்த்தலானது எமது கட்சியையும் அதன் தலைமையையும் அரசியலிலிருந்து ஓரங்கட்டும் முயற்சி என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.ஆனாலும்தாங்கள் அதற்கு அளித்த வியாக்கியானமானது கிழக்கில்  இன நல்லுறவை வளர்க்க எடுக்கும் முயற்சி என்பதாக அமைந்திருந்தது.எது எப்படியிருந்த போதிலும்  துரதிஷ்டவசமாக  நீங்கள் எடுத்த முடிவானது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகவே அமைந்து போனது.அந்த ஆட்சியில் கிழக்கு தமிழ்-முஸ்லீம் உறவுகள் மேலும் சீர்குலைவையே சந்தித்துள்ளன என்பதை நான்  உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லையென எண்ணுகின்றேன்.அதற்கான காரணங்களை நாம் இங்கு பட்டியலிட விரும்பவில்லை. அன்றைய நிலையில் தாங்கள் எடுத்த ஒருதலைப்பட்சமான அந்த முடிவானது தங்களது அரசியல் வரலாற்றில் எடுக்கப்பட்ட மாபெரும் தவறாக  எமது மக்களால் கருதப்படுகின்றமையை இந்த நேரத்திலாவது நீங்கள்தயவுடன் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வகையில் இம்முறையும் எமது மக்கள் நலன்சார்ந்த இந்த கோரிக்கையை கொள்கை வேறுபாடுகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து தங்களுக்கு தெரிவிக்கும் கடமையை நாம் செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்புணர்ந்தே தங்களுக்கு  இக்கடிதத்தை எழுதுகின்றோம்.

இறுதியாக!

 எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஏற்பட்டுள்ள பிரதேச சபைகள் பற்றிய குழப்பகரமான நிலையில் தேசிய கட்சிகளின்  அவசியமற்ற தலையீடுகளை விடுத்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே  எமது மக்களின் அபிலாசைகளாக உள்ளது.அதன் அவசியத்தினை  புரிந்து கொண்டு கருமமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு  முன்வர வேண்டும் என்கின்ற எமது கோரிக்கையை ஒரு சாணக்கியமும் பொறுப்பும்மிக்க தலைமையாகிய தாங்கள் கவனமுடன் பரிசீலிக்க வேண்டுமென  தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இவ்வண்ணம்
பூ.பிரசாந்தன்
பொதுச்செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
மட்டக்களப்பு
23/02/20180 commentaires :

Post a Comment