2/25/2018

அஞ்சலிகள்-சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி


  தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் புகழ் பெற்று விளங்கினார். 1969ம் ஆண்டு இயக்குநர் எம் ஏ திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த 'துணைவன்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக 'நம்நாடு' கனிமுத்து பாப்பா' 'வசந்த மாளிகை' போன்ற பல படங்களில் நடித்தார். இவர் கதாநாயகியாக அறிமுகமானது 1976ம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'மூன்று முடிச்சு' திரைப்படமாகும். 1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

அதன் பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. அதன் பின் மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்கு சான்றாக 'ஆலிங்கனம்' குட்டவும் சிக்ஷையும்' 'ஆத்ய பாடம்' ' ஆ நிமிஷம்' போன்ற திரைப்படங்களை கூறலாம்.


1975ம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜுலி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன்' (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட 'மூன்றாம் பிறை' திரைப்படம் ஹிந்தியில் சத்மா' என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.  

0 commentaires :

Post a Comment