2/15/2018

கிழக்கில் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த ஆட்சியே வேண்டும்!

கிழக்கில் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த ஆட்சியே கிழக்கு மாகாணசபையை தமிழர்கள் கைப்பற்றவும் கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பையும் தனித்துவத்தையும் பாதுகாக்க உதவும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Résultat de recherche d'images pour "sri lanka people"
கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளானர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழர் தாயகமான வடகிழக்கு பகுதிகளில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள நிலையில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவை பெறவேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் ஏனைய தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
குறிப்பாக கிழக்கில் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த ஆட்சியே கிழக்கு மாகாணசபையை தமிழர்கள் கைப்பற்றவும் கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பையும் தனித்துவத்தையும் பாதுகாக்க உதவும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் ஊடாக பெரும்பான்மை சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் இதுவரை காலமும் ஒன்றிணைந்திருந்த தமிழ் மக்களுக்கான கட்சிகளும், வாக்குகளும் பிரிந்து சென்றுள்ளன.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் கடந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து நடாத்திய ஆட்சி அதிகாரத்தின் பாதிப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக காணி பிணக்குகள் உள்ள தமிழ் முஸ்லீம் எல்லைக் கிராமங்களை கொண்ட பிரதேச சபைகளையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஜனநாயக பண்பற்ற கடந்த கால செயற்பாடுகளே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே கடந்தகாலங்களில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தமிழ் மக்களின் பெரும்பான்மை அபிப்பிராயங்களை கேட்டறிந்து செயற்பட வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களின் தாய் கட்சி என்று தம்மை கூறிக்கொள்ளும் தமிழரசுக் கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளாது தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்.
இதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி நிற்கின்றது.
குறிப்பாக கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைக்கவிருக்கும் கூட்டாட்சியானது எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வெற்றி பெறுவதற்கான ஆரம்ப புள்ளியாகவும் கிழக்கு மாகணத் தமிழர்களின் இருப்பையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறுகின்றோம்.
மிக முக்கியமாக ஒவ்வாத கொள்கைகளை கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளுடன் இணைவதானது தமிழ் மக்களின் 60 ஆண்டுகால போராட்டத்தையும் அதற்காக கொடுக்கப்பட்ட உயிர் தியாகங்களையும் அடகுவைப்பதற்கு ஒப்பானதாக அமையும் என்பதுடன் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்து விடும்.
2009ம் ஆண்டுக்கு பின்னர் பல தமிழ் கட்சிகள் பிரிந்து செல்வதற்கும் உருவாகுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருந்துள்ளது. அத்துடன் தன்னோடு இணைய வந்த பல தமிழ் கட்சிகளை தட்டிக்களித்து இன்று அவர்களுக்கு மக்கள் செல்வாக்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் தமிழ் மக்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க மேலதிக ஆசனங்கள் தேவைப்படும் சபைகளுக்கு பிரிந்து நிற்கும் ஏனைய தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்க வேண்டும். அதன் ஊடாக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டி போட்டு வெற்றி பெறும் சூழலை உருவாக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதை விடுத்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு அப்பால் சென்று நல்லிணக்க என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்பையும் தனித்துவத்தையும் அடகு வைத்து ஆட்சி அமைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமாக இருந்தால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதை விட பெரிய தோல்வியையே சந்திக்க நேரிடும் என்பதுடன் இன்னும் பல தமிழ் கட்சிகளை உருவாக்கிய பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படும்.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க விரும்பின் வெற்றி பெற்ற ஏனைய தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்க வேண்டும் இல்லையேல் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தமிழ் மக்களின் இருப்பையும் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதனை இத்தால் வேண்டி நிற்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம்
13.02.2018

0 commentaires :

Post a Comment