3/10/2018

கோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பதிவு செய்த எச் ராஜா அவர்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்திய அரசியலும் அதன் மாநில விவகாரங்களும் தற்போது மிக மோசமான சூழலில் நிலவும் காலமாக தோற்றமளிப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஒருதேசமானது தனக்கான, தனக்கே உரித்தான புனிதமான ஒரு மதம் எனக்கருதி அதன் அடிப்படைவாதக் கருத்தியலில் ஊன்றப்பட்டு வளர்வதானது அத்தேசம் தன் சுய வளர்ச்சிக்கு சாதகமான எந்த வாய்ப்பையும் பெறும் தகுதியை இழந்து நிற்கும்.
இந்தியாவின் இன்றைய வளர்ச்சி எனக்கருதும் வெளித்தோற்றம் என்பது உலகமயமாதலின் பொருளாதார வெளிச்சத்தின் பயனாக விளைந்தது. இந்த உலகமயமாதலின் வெளிச்சமே அதன் இந்துமத அடிப்படைவாத வெளிப்பாடுகளை ஓரளவிற்கு இருள் போர்த்து மூடிப்பாதுகாத்தும் வருகிறது எனலாம்.
திரிபுராவில் நிகழ்ந்த அரசியல் அதிகாரமாற்றமானது இந்துமத அடிப்படைவாதத்தை பேணும் மத்திய அரசின் மதப்பலி கொள்ளும் வேள்விக்கு தீ மூட்டிய செயலாக நிகழ்ந்திருக்கிறது. அதற்கான முதல் கொள்ளியை லெனின் சிலைக்கு வைத்து வேள்விச் சன்னதமாடியது பாரதிய ஜனதா கட்சி.
பல்வேறு புதிய “பிரமுகர்களை” தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஒரு புறம் ஊக்குவித்தும் வருகிறது பாரதிய ஜனதா கட்சி. தமிழ் நாட்டில் நிரந்தரமாக தனது காலை ஊன்றுவதற்கான பரிசோதனை முயற்சியாக வாய் நிரம்பிய அநாகரிக சொற்களுடன் அரசியல் பேசும் எச் ராஜா வையும் ஒரு திசையால் நகர்த்தி வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
அவர்தான் “லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் இவேரா ராமசாமி சிலை” என பதிவு செய்திருக்கிறார்.
பெரியார் சிலை உடைப்பு குறித்த எச் ராஜாவின் இந்த நாறிய வார்த்தைகளை தோண்டிப் புதைத்து மூடிவிட்டு எம்மால் பெரியாரை உயிருடோடு வைத்திருக்கும் காரியத்தை சாதிக்கமுடியம். இருப்பினும் பெரியார் மீது மதிப்பும் மாரியாதையும் கொண்ட கோடிக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பதிவு செய்த எச் ராஜா அவர்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி -பிரான்ஸ்

0 commentaires :

Post a Comment