4/16/2018

வெருகல் படுகொலை14 வது ஆண்டு நினைவு பேருரை

வெருகல் படுகொலை14 வது ஆண்டு  நினைவு  நாளில் கெளரவத்தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின்  சிறப்பு பேருரை வெருகல் மலை பூங்காவில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் அவர்களினால் ஆற்றப்பட்டது.
Résultat de recherche d'images pour "வெருகல் படுகொலை"

என்றும் எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியகிழக்கின் வீரத்தாய்மார்களே! தந்தையர்களே!
இந்த மண்ணின் புதல்வர்களே! புதல்விகளே! எமது கட்சியின் மூத்த தலைவர்களே! பிரதேச பொறுப்பாளர்களே! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று நெஞ்சை நிமிர்த்தி நின்று நானில்லாத இந்த மூன்றுவருட காலமும் எமது கட்சியை தாங்கி நிற்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் போராளிகளே!
புதியதாக தெரிவான உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களாகவும் தவிசாளர்களாகவும் எமது கட்சியை பிரதிநிதித்துவம் செய்து நிற்கின்ற மக்கள் பிரதிநிதிகளே!
உங்களனைவருக்கும் எனது வணக்கங்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
இது ஈழத்தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய நினைவு நாள். ஆம், சுமார் பதினான்கு வ`ருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு சித்திரை மாத பத்தாம் நாளில் இந்த மண்ணிலே நடந்தேறிய அகோர நிகழ்வொன்றின் நினைவுநாள். அதுதான் அந்த நிகழ்வுதான் உலகப்படுகொலைகளின் வரிசையில் இடம்பிடித்து விட்ட வெருகல் படுகொலையாகும்.
தமிழீழ தாகம் கொண்டு தாய் தந்தையரை, உற்றார் உறவினர்களை, வீடு வாசல்களை விட்டு வெளியேறி கிழக்கிலிருந்து வடக்கு வரை சென்று போராடிய எமக்கு யாழ்ப்பாண மேலாதிக்கம் தந்த பரிசுதான் அந்த வெருகல் படுகொலையாகும்.
இத்தோடு மூன்றாவது வருடமாக எமது மாவீரர்களின் நினைவாக இந்த வெருகல் மலை பூங்காவில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்ள காலம் என்னை அனுமதிக்க வில்லை. அதற்காக பின்னணினியில் நின்று கருமமாற்றுபவர்கள் யாவர் என்பதுவும் உங்களனைவருக்கும் தெரியும்..
அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டியதன் மூலம் நடை பெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றுள்ளீர்கள்.ஆம் எங்களின் வெற்றி உங்களின் வெற்றியாகும்.தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்திலே பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. அந்த வெற்றி உங்களின் வெற்றியாகும்.
ஆம் அன்பார்ந்த மக்களே! நீங்களே எமது வழிகாட்டிகள்,நீங்களே எமது எஜமானர்கள்,நீங்களே எம்மை வாழவைப்பவர்கள்.அந்த வகையிலே கடந்த மூன்று வருடங்களாக என்னை சிறையிலே பூட்டிவைத்தாலும் இந்த வெருகல் படுகொலையில் உயிர்நீத்த வீரர்களின் ஆன்மாக்களே எமக்கு ஆத்ம பலம் தருகின்றார்கள். அவர்களின் கனவுகள் நிறைவேறவே எமது அரசியல் பயணம் விடாது தொடர்கிறது.
கடந்த தேர்தலின்போது பிள்ளையானை மூன்று வருடங்களாக பூட்டி வைத்து விட்டோம். இனி ஒழிந்தான் பிள்ளையான் என்று எக்காளமிட்டார்கள் சிலர். ஆனால் மூன்று வருடமல்ல முப்பத்து வருடங்கள் நான் சிறையிலே கிடக்க நேர்ந்தாலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஒழியப்போவதில்லை என்பதை இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளை வழங்கி நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். ஏனெனில் எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்று களமுனைகளில் நிரூபித்தவர்கள் நாங்கள்.

கடந்த ஆண்டு மாவீரர் தின செய்தியில் நான் உங்களுக்கு குறிப்பிட்டிருந்த அந்த விடயத்தை இங்கே நினைவு படுத்த விரும்புகின்றேன்.
""இந்த பிள்ளையான் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த மண் உள்ளவரை, அதில் எமது மைந்தர்கள் வாழும் வரை, இந்த வெருகல் மலைப் பூங்காவில் காற்று வீசும் வரை, நாயும் நரியும் தின்ற எம் போராளியின் உடலங்கள் காய்ந்து கிடந்த கதிரவெளியிலே கடலலைகள் பாய்ந்து கொண்டிருக்கும் வரை இந்த வெருகல் படுகொலை தினம் என்றென்றும் நினைவு கூரப்பட்டுக் கொண்டேயிருக்கும். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இந்த கிழக்கு மண்ணெங்கும் வியாபித்துக்கொண்டேயிருப்பார்கள் என்பதை வெருகல் படுகொலையில் உயிரிழந்த இந்த மாவீரர்கள் நினைவாக இந்த உலகுக்கு அறுதியிட்டு சொல்லுகின்றேன்.""

ஆம் நான் கடந்த வருடம் அறுதியிட்டு சொன்ன சத்தியவாக்கை உங்கள் வாக்குகளை கொண்டு இந்த தேர்தலிலே நீங்கள் நிறைவேற்றியிருக்கின்றீர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் நீரோட்டத்தை தீர்மானிப்பவர்களாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளே இருப்பார்கள் என்பதை இந்த உலகுக்கு உரத்துச் சொல்லியுள்ளீர்கள். அதனையிட்டு இந்த வேளையிலே எனது நெஞ்சார்ந்த நன்றிகளை எமது மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஆகவேதான் உங்களது ஆணையின் பெயரால் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பிரதேச சபைகளில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோமென பகிரங்க அழைப்புவிட்டோம். தேசிய கட்சிகளின் தலையீடுகள் உள்ளுராட்சி நிர்வாகங்களுக்கு அவசியமற்றதென கருதி அவற்றினை தவிர்க்கும் நோக்குடன் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்த பகிரங்க அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுத்தோம். எமக்கான பதவிகளையும் கட்சி நலன் சார் கெளரவங்களையும் விட தேசிய கட்சிகள் இன்றிய தமிழ் கட்சிகளின் கூட்டாட்சி எமது பிரதேச சபைகளின் அதிகாரங்களை பலப்படுத்தும் என்கின்ற நோக்கம் மட்டுமே எமது அழைப்புக்கான அடிப்படையாகவிருந்தது.

ஆனால் எமது மக்களின் ஆணையின் பெயரால் நாம் விடுத்த பகிரங்க அழைப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதில் எழுதும் குறைந்தபட்ஷ அரசியல் நாகரிகத்தை கூட கடைப்பிடிக்க தவறிவிட்டனர். அது அவர்களுக்கு வழமையானதுதான். ஆனால் எமது அழைப்பை நிராகரித்ததன் ஊடாக எமக்கு வாக்களித்த மக்களின் இறைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உதாசீனம் செய்து விட்டார்கள். இது வெறும் குற்றச்சாட்டு அல்ல. காலாகாலத்துக்கு மட்டக்களப்பு மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய பழியாகும் என்பதை இந்த வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வடமாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் பரம விரோதியான ஈபிடிபி கட்சியுடன் இணைந்து பிரதேச சபைகளை ஆள முடியுமென்றால், அது அந்த மக்களின் நலன் சார்ந்த முடிவு என்றால்.கிழக்கு மக்களின் நலன்கள் மட்டும் என்ன கிள்ளு கீரையா என்று கேட்க விரும்புகின்றேன்?
பாருங்கள் கடந்த வாரம் செங்கலடி பிரதேச சபையிலே பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்று முன்னணியில் இருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆட்சியமைத்து விடக்கூடாது என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவை வழங்கி ஒரு தேசிய கட்சிக்கு செங்கலடி பிரதேச சபையை தாரை வார்த்திருக்கின்றனர். இதற்காகவா தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தார்கள்? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை செங்கலடிக்கு கொண்டுவரவா "தமிழ் தேசிய"த்துக்கு மக்கள் வாக்களித்தனர் என்று கேட்க விரும்புகின்றேன்?
கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை ஜனநாயகத்துக்கு முரணாக தாரைவர்த்தவர்கள் செங்கலடி பிரதேச சபை ஒரு கேடா என்று எண்ணியிருப்பார்கள் போலும். யாழ்ப்பாணத்திலும்,கொழும்பிலும் இருந்துகொண்டு எமது மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களுக்கு செங்கலடியின் முக்கியத்துவம் எப்படி புரியும்? மட்டக்களப்பு மாவட்டத்திலே தனி சிங்கள மக்கள் வாழும் வட்டாரங்களை கொண்டது செங்கலடி பிரதேச சபையாகும்.. எமது பாரம்பரிய பூமிகள் பறிபோகின்ற எல்லை பிரதேசங்கள் இந்த செங்கலடி பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்டது. இந்த நிலையில் இந்த பிரதேச சபைகளின் ஆட்சியை தமிழ் கட்சிகள் இழந்திருப்பது ஆரோக்கியமானதல்ல. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இதுபற்றிய கவலைகள் கிடையாது. நாளை பாரம்பரிய பூமிகள் பறிபோகிறது;சிங்கள குடியேற்றம் நடக்கின்றது என்று அறிக்கை விடுவதுடன் அவர்களது வேலை முடிந்து விடும்.
இவற்றையெல்லாம் தமது தலைமைகளுக்கு எடுத்துச்சொல்லி செயல்படுத்த முடியாத கையாலாகாதவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூர் தலைவர்கள் இருப்பதுதான் வேதனையான விடயம்.

ஆகவேதான் இந்த மாவீரர்களின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டுமானால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. சிங்கள இனவாதம் ஒரு புறமும் யாழ்மேலாதிக்கம் மறுபுறமுமாக நெருக்குதல் தர எம் கூடவே வாழும் சகோதர இனத்தின் பெயரில் அரசியல் செய்கின்ற "இனவாத தலைவர்களின் சாணக்கியங்களை" வென்று முன்னேற வேண்டியுள்ளது.
எனவேதான் இந்த மாவீரர்நாள் எமக்கு அந்த வல்லமையை தரவேண்டும். அதனுடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கண்முடித்தனமான .அரசியல் முடிவுகளால் நாம் இழந்த கிழக்கை விரைவில் மீட்போம் எனக்கூறி எனதுரையை முடிக்கின்றேன்.
நன்றிகள்
சிவ.சந்திரகாந்தன்
(முன்னாள் முதலமைச்சர், தலைவர்-தமிழ்மக்கள்விடுதலை புலிகள், )
10/04/2018 - சிறைச்சாலை -மட்டக்களப்பு

0 commentaires :

Post a Comment