6/27/2018

1975 அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை - பி.ஜே.பி. ஆட்சியிலோ இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை! - கி.வீரமணி

மதச்சார்பின்மை - சமூகநீதி - பொருளாதாரச் சீர்குலைவுகள்
மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை Résultat de recherche d'images pour "veeramani"
1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்தது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை; இப் பொழுது நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியிலோ அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை யாகும். 1975 இல் ஆளும் கட்சிக்கு தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தை இந்த ஆட்சியாளரும் சந்திக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1975 ஜூன் 25 ஆம் தேதி இந்திரா காந்தி அரசால் முன்பு எப்போதும் இந்தியா கண்டிராத ஒரு நெருக்கடி காலம் (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது.
43 ஆண்டுகளுக்கு முந்தைய நெருக்கடி நிலை
பத்திரிகைச் சுதந்திரம் முதல் நீதித்துறையின் சுதந்திரம் உள்பட பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள், தலைவர்களுக்கு அடுத்த நிலை கட்சி ஊழியர்கள் முதலியோர் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். (அதில் திராவிடர் கழகமும் உண்டு).
இந்திய ஜனநாயக வரலாற்றில் இல்லாத கரும்படலம் அது என்பதில் அய்யமில்லை.
அதற்காக சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திருமதி இந்திரா காந்தி வருத்தமும் தெரிவித்துப் பதிவும் செய்தார்!
அந்த நெருக்கடி நிலைபற்றி குறைகூற பி.ஜே.பி.,க்கு தார்மீக உரிமை உண்டா?
43 ஆண்டுகள் ஓடிவிட்டன. உண்மைதான்! அதை காங்கிரசு கட்சிக்கு எதிரான பிரச்சார ஆயுதமாக பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், பிரதமர் மோடியும் அவரது குரலாக விளங்கும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் பயன் படுத்திட ஓங்கிக் குரல் எழுப்புகின்றனர்!
அதற்குரிய தார்மீக உரிமை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கும்பல்களுக்கு இன்று உண்டா என்ற கேள்விக்கு அறிவு நாணயத்துடன் பதில் கூறவேண்டும்.
அன்று நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது பகிரங்க மாக; உரிமை பறிப்புகள் பகிரங்கமாக சட்டத்தின் துணை யுடன் நடைபெற்றன.
அந்த - நெருக்கடி நிலைபற்றி இன்று நெக்குருகப் பேசும் இந்த காவிகளின் ஆட்சியில் நாட்டில் காணும் நிலை என்ன? அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைதானே!
உண்ணும் உரிமையும் பறிபோகிறதே!
1. அரசியல் சட்டத்தின் பீடிகையில் உள்ள மதச் சார்பின்மை என்ற சொல்லையே நீக்கிவிட்டு குடியரசு நாளில் மத்திய அரசு செய்தி ஏடுகளில் விளம்பரப்படுத்துகிறது!
2. அன்று எண்ணும் (சிந்தனை) சுதந்திரப் பறிப்பு - இன்று உண்ணும் உரிமையும் பறிப்பு! மக்கள் என்ன உணவு சாப்பிடுவது என்பதை ஆளும் வர்க்கமா - அரசா தீர்மானிப்பது?
3. நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என் பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளே - செய்தியாளர்கள் கூட்டம் கூட்டி அறிவிக்கும் பட்டாங்கமான நிகழ்வு நடை பெறுகிறது!
4. பெரும் பெரும் முக்கிய பதவிகளுக்கு அமெரிக்கா விலிருந்து அழைத்து வரப்பட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தொடங்கி - இன்று வந்துள்ள செய்திப்படி - தேசிய மனித உரிமை ஆணையத்தின் உ.பி. மற்றும் அரியானா மாநிலங்களில் மதச்சிறுபான்மையினர் குறி வைத்து என்கவுண்ட்டர் கொலைகள் செய்யப்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் ஏதும் கூறாமல் அமைதியாக இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாமல், இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் சிறப்பு மேற்பார்வையாளர் ஹர்ஷ் மாண்டர் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதுவரை எத்தனை எத்தனையோ தொடர் நிகழ்வுகள்.
5. நாட்டின் தலைசிறந்த அறிவு ஜீவிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் - கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகள்போல் உள்ள இராமசேனா, இந்து சேனா போன்ற இந்துத்துவ தீவிரவாதக் குழுக்களால் பயிற்சி கொடுக்கப்பட்டு திட்டமிட்டு கொலை செய்யப்படும் அபாயகரமான சூழ்நிலை!
6. பா.ஜ.க.வுக்குள்ளேயே இருந்தவர்கள் ஆங்கே நிலவும் கருத்துரிமை பறிப்புக் காரணமாக வெளியேறி, பகிரங்கமாக விமர்சனம் செய்யும் விபரீதமான சூழ்நிலை இப்போது உள்ளதே!
முன்னாள் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்கா என்ற ஓய்வு பெற்ற பீகார் அய்.ஏ.எஸ். அதிகாரி இன்று நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று கூறியுள்ளாரே!
7. குறிப்பாக பொருளாதாரத் துறையில், பண மதிப்பிழப்பு , பொது சேவை வரி என்ற பெயரில் மாநிலங்கள் மாதந்தோறும் டில்லியிடம் கையேந்தி பிச்சை கேட்கும் விசித்திர நிலை - அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலைதானே - கூட்டாட்சித் தத்துவமே குழிதோண்டிப் புதைக்கப்படும் கேலிக்கூத்து நடைபெறுகிறதே!
8. விவசாயிகள் தற்கொலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகிவரும் நிலை.
9. வேலை கிட்டாத கொடுமையால் - 80 லட்சம் இளைஞர்கள் அவதி!
10. பன்னாட்டு முதலாளி வர்க்கத்தின் படையெடுப்புப் பல மடங்கு பெருக்கம். ஆக்டோபஸ் போல ஆதிக்கக் கரங்கள் அதிகாரவர்க்கத்தினையே ஆளுமை செய்யும் தோற்றம் உள்ளதே!
சமூகநீதிக்குச் சாவு மணி!
11. சமூகநீதிக்கு சாவு மணி அடிக்கும் போக்கு - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவி நியமனங்களில் அரசின் தலையீடு - குருகுலக் கல்வி என்னும் பெயரால் பார்ப்பனீய - இந்துத்துவ சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் கல்வி.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பறிக் கும் வண்ணம் படுகொலைகள், வன்கொடுமை சட்டத் தின் பற்களைப் பிடுங்கும் தீர்ப்பினைக் கண்டும் காணாததுபோல இருப்பது.
இப்படி ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம்.
நட்பு வேடம் போட்டு நயவஞ்சகத்தால் மாநில உரிமைகள் முதல் மனித உரிமைகள் வரை பறிக்கும் இன்றைய அறிவிக்கப்படாத ஆபத்தான நெருக்கடியை மிஞ்சும் ஆளுமையைவிட, அறிவித்துவிட்டு அன்று நடந்த நெருக்கடி நிலை ஆயிரம் மடங்கு மேல் அல்லவா?
தேர்தல் முடிவு பாடம் கற்பிக்கும்!
அன்று ஆட்சியாளர்கள் சந்தித்த தேர்தல் முடி வினை - இன்றைய அறிவிக்கப்படாத நெருக்கடியின் நாயகர்கள், ஆட்சியாளர்கள் சந்திக்கப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை! ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்?
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
27.6.2018

0 commentaires :

Post a Comment