1/15/2019

தலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். பாகம் -இரண்டு கலாநிதி.சு.சிவரெத்தனம்-மட்டக்களப்பு

(கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட ஆய்விதழான 'நெய்தல்' டிசம்பர் 2016, தொகுதி - 8இல் வெளிவந்த  கலாநிதி  சு.சிவரெட்ணம் அவர்களின் கட்டுரை.)
தலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.பாகம் -இரண்டு 


இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களின் சமூக அமைப்பில் இரு பிரதான சமூக அமைப்புக்கள் முக்கியம் பெறுகின்றன.Résultat de recherche d'images pour "NORTH LANKA"
1. மட்டக்களப்புச் சமூக அமைப்பு
2. யாழ்ப்பாண சமூக அமைப்பு
இவை ஒவ்வொன்றும் அவ்வாறு குறிப்பிடுவதற்கான வேறுபட்ட வாழ்க்கை முறையினையும் நம்பிக்கைகளையும் நடத்தைகளையும் கண்ணோட்டங்களையும் கொண்டவைகளாகும். ஆயினும் இவ்விரு சமூக அமைப்பிலும்; பிராமணியம் அதிகாரத்துவ சாதிகிடையாது. மட்டக்களப்பு சமூக அமைப்பில் முக்குவரும் யாழ்ப்பாண சமூக அமைப்பில் வேளாளரும் அதிகாரத்துவ சாதிகளாக இருக்கின்றனர். இந்த அதிகாரத்தினைக் காட்டுகின்ற முக்கியமான ஆதாரம் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய நீதிபரிபாலனத்துக்காகத் தொகுக்கப்பட்டு நடைமுறைப்படுதட்தப்பட்ட சட்டங்களாகும். அந்தவகையில் மட்டக்களப்பில் முக்குவ சட்டமும் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டமும் இச்சமூகங்களின் தனித்துவங்கள் கருதியும் அவற்றின் வேறுபட்ட வாழ்க்கைமுறையினைக் கருதியும் தொகுக்கப்பட்ட சட்டங்களாகும்.
மட்டக்களப்புச் சமூக அமைப்பு
மட்டக்களப்புச் சமூகத்தின் சாதிகள் பற்றி விபரிக்கும் மட்டக்களப்பு மான்மியம் 22 சாதிகள், அச்சாதிகளுக்குரிய குலவிருதுகள், தெய்வங்கள், தொழில்கள் என்பன பற்றி; கூறி இவ் 22 சாதிகளில் 9 சாதிகளையும் புதிதாக 8 சாதிகளையும் சேர்த்து மொத்தம் 17 சாதிகளை சிறைக்குடிகளாக வரையறுக்கின்றது. எனவே மட்டக்களப்பு மான்மியம் கூறும் மொத்தச் சாதியினர்  30 ஆகும். இந்த 30 சாதிகளில் 13 சாதிகள் சிறைக்குடிகளல்லாத சாதிகளாகவும் 17 சிறைக்குடிகளாகவும் இருக்கின்றன. ஆயினும் இந்தப் பதினேழு சாதிகளும் 13 சாதிகளுக்கும் சேகவம் செய்யவேண்டுமென்பதில்லை என்பதை மான்மியம் பின்வருமாறு கூறுகின்றது.
காலிங்ககுலம், படையாட்சிகுலம், பணிக்கனார் குலம், உலகிப்போடி குலம் இவர்களுக்கே இந்தச் சிறைகள் ஊழியம் செய்தாலொழிய மற்றவர்களுக்குச் செய்யக்கூடாதென்று பூபாலவன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைகளுக்கும் கட்டளை பண்ணியது (நடராசா.F.X.C. 1998.பக்.103)
இங்கு குலம் என்பது சாதியை அன்றி குடியைக் குறிக்கின்றது. ‘குடி’ என்பது சாதிகளுக்குள் இருக்கும் குடும்ப முறையாகும்.
காலிங்காகுலம் வெள்ளாளரிடையேயுள்ள ஒரு குடி, பணிக்கனார் குடியும் உலகிப்போடி குடியும் முக்குவரிடையேயுள்ள இரு குடிகள். எனவே இப் பதினேழு சிறைக்குடி ஊழியங்களும் முக்குவருக்கும் வெள்ளாளருக்குமே உரியது என்பது தெளிவு. இவ்வண்ணம் கூறும் மட்- மான்மியப்படி 3 விதமான சாதிப்பரிவுகளைக் காணுகிறோம்.
1. சிறைக்குடிகளின் ஊழியம் பெற்று வாழ்ந்த – அதிகார அடைவின் முதன்மை ஸ்தானம் பெற்ற (முக்குவர், வெள்ளாளர்) சாதியினர்.
2. சிறைக்குடிகளின் முழு ஊதியம் பெறாது வாழ்ந்த 2வது ஸ்தானம் பெற்ற (கரையார், வேடுவர், துலுக்கர் முதலிய) சாதியினர்.
3. 17 சிறைக்குடிகளாக அமைந்து ஊழியம் பெற்ற சாதியினர். (மௌனகுரு.சி.1998.பக்.89)
நாம் முன்னர் குறிப்பிட்டபடியே முக்குவர், வேளாளர், ஆகியோரைச் சமூகத்தின் தலைமைச் சாதியினராகவும், தட்டார், கொல்லர், கைக்குளவர், கரையார் ஆகியோரை (ஊழியம் செய்யாத) இரண்டாம் சாதியினராகவும் அம்பலர், வண்ணார், பறையர் ஆகியோரை (ஊழியம் செய்யும்) தாழ்நிலையிலுள்ள சாதியாகவும் கொண்ட ஒரு சமூக அமைப்பு மட்டக்களப்பிற் தொடர்ந்து நிலவியது என்பதை S.O.கனகரெத்தினத்தின் கூற்றும் தெளிவுபடுத்துகிறது. (மௌனகுரு.சி.1998.பக்.90)
மட்டக்களப்பு மான்னமியம் 30 சாதிகள் 17 சிறைக்குடிகள் பற்றிக்கூறினாலும் இன்று இவற்றுள் பெருமளவான சாதிகளின் பொருளாதார அடித்தளமும் அவர்களின் உற்பத்தி உறவுகளும் மாற்றமடைந்ததன் காரணத்தினாலும் அகமணமுறையில் ஏற்பட்ட நெகிழ்ச்சித்தன்மையினாலும் இன்று மிகச் சில சாதிகளே நடைமுறையிலுள்ளன. இவற்றை இரண்டு வகையாகக் கூறலாம்.
1. ஊழியம் செய்யாத சாதிகள் (முக்குவர், வெள்ளாளர், சீர்பாதக்காரர், கரையார், பொற்கொல்லர்) இவர்கள் தங்களுக்கான வாழ்விடங்களையும் நிலபுலங்களையும் கொண்டவர்கள். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இவர்களிடம் அகமணமுறையில் நெகிழ்ச்சித்தன்மை ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
2. ஊழியம் செய்யும் சாதிகள் ( வண்ணார், அம்பட்டர், பறையர்) இவர்கள் ஆரம்பத்தில் தங்களுக்கான வாழிடங்களை ஊழியம் செய்யாத சாதியினரைச் சார்ந்து வாழ்ந்து அவர்களுக்கு ஊழியம் செய்து கடும் சுரண்டலுக்கும் சமூக ஒடுக்கதலுக்கும் உள்ளானவர்கள். இன்று பொருளாதார ரீதியாக இவர்கள் முன்னேறிய போதிலும் ஊழியம் செய்யாத சாதிகளைப் போன்று பூர்வீகமாக தங்களுக்கென்று தனியான பல கிராமங்களைக் கொண்டு சமூக அதிகாரம் மிக்கவர்களாக இல்லை. அத்துடன் இன்றும் (பலர் தங்களுடைய குலத்தொழிலை விட்டிருந்த போதிலும்) ஊழியம் செய்பவர்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இதன் காரணத்தினால் இவர்களிடத்தலான அகமணமுறை மாற்றமின்றி பின்பற்றப்படுகின்றது.
எனவே மட்டக்களப்பைப் பொறுத்தளவில் இன்று தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவாகள் மேலே குறிப்பிட்ட ஊழியம் செய்யும் சாதிகளான வண்ணார், அம்பட்டர், பறையர் என்போர்களுடன் வெளியில் இருந்து வந்து இங்கு ஊழியம் செய்து தற்போது அரச அலுவலகங்களில் குறிப்பாக பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை என்பவற்றில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களாகவும் செருப்புத்தைப்பவர்களாகவும் வாழும் அருந்ததியினரும் உள்ளடங்குகின்றனர். இவர்களையே மட்டக்களப்பின் ‘தலித்’ மக்கள் எனக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாண சமூக அமைப்பு
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று யாழ்ப்பாண சமூக அமைப்பு மட்டக்களப்புச் சமூக அமைப்பிலிருந்து வேறுபட்டதாகும். இந்த வேறுபாடானது நிலவுடமை மட்டும் சார்ந்தது பேராசிரியர்.கா.சிவத்தம்பி சமூக அதிகார நிலையினைப் பொறுத்து யாழ்ப்பாணத்து சாதிக்குழுக்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றார்.
1. உயர் சாதியினர் (வெள்ளாளர், அகம்படியார், மடப்பள்ளியார்)
2. உயர் சாதியல்லாதார் (நட்டுவர், செட்டியா, சேணியர், கைக்கோலியர்,தட்டார்,கொல்லர், திமிலர்,முக்குவர் போன்றோர்)
3. குடிமக்கள் (கோவியர், நளவர்,பள்ளர்,சாண்டார்,சிவியார்,)
சிவத்தம்பி அவர்களினால் குறிப்பிடப்படும் குடிமக்களை விட அம்பட்டர், வண்ணார், பறையர், போன்றோரும் குடிமக்கள் என அழைக்கப்பட்டனர் என ‘குடிமக்கள்’ என்ற கட்டுரையில் க.அருமைநாயகம் குறிப்பிடுவதாக பரம்சோதி தங்கேஸ் கூறுகின்றார். அத்துடன்,
கெனத் டேவிட் யாழ்ப்பாணச் சாதியினை உயர் சாதி (High Cast), நல்ல சாதி (Good Cast), குறைந்த சாதி (Low Cast) என மூன்றாகப் பகுக்கின்றார். இப்பகுப்பின் அடிப்படையில் பிராமணர், சைவக்குருக்கள், வெள்ளாளர், கோவியர், சைவச் செட்டி ஆகிய சாதிக்குழுக்களை “உயர்சாதியாகவும்”ஆச்சாரி, தட்டார், கைக்குழார், சேணியர், சாண்டார், முக்குவர், திமிலர், பண்டாரம், நட்டுவர், கரையார், தச்சர், கொல்லர், குயவர், ஆகிய குழுக்களை நல்லசாதியாகவும் நளவர், பறையர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், துரும்பர் ஆகிய குழுக்களை குறைந்த சாதியாகவும் பகுக்கின்றார். (மேற்கோள்,தங்கேஸ் பரம்சோதி, 2013,பக்.19)
கெனத் டேவிட்டின் யாழ்ப்பாணச் சாதிகள் பற்றிய பட்டியலை மேற்கோள்காட்டி, பிறைன் ஃபாபன்பேக்கர் யாழ்ப்பாணச் சாதியில் ஏழு சாதியினரை மட்டுமே குடிமக்களாகக் குறிப்பிடுகின்றார். தச்சர், தட்டார், கொல்லர், குயவர், வண்ணார், அம்பட்டர், பறையர், ஆகியோர் அக்குடிமக்களாவர்.(மேலது.பக்.20)
எனவே இங்கு ஒருத்தரால் குடிமக்களாக குறிப்பிடப்படுபவர் மற்றவரினால் உயர்சாதியாக குறிப்பிடப்படுவதனையும் ஒருத்தரால் குடிமக்கள் அல்லாதவர்களாக குறிப்பிடப்படுபவர்கள் இன்னொருத்தரால் குடிமக்களாக குறிப்பிடப்படுவதiயும் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு யாழ்ப்பாணச் சாதியமைப்புப் பற்றி ஆளுக்கு ஆள் வேறுபட்ட எண்ணக்கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பது யாழ்ப்பாண சாதியமைப்புப்பற்றிய சரியான தெளிவினை பெற்றுக்கொளவதற்கு தடையாக இருப்பதுடன் அதன் சிக்கல் தன்மையினையும் காட்டுகின்றது. இருந்த போதிலும் யாழ்ப்பாண சமூகத்தில் ‘பஞ்சமர்’ என்கின்ற நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் எனும் ஐந்து சாதிகளே மிகவும் தாழ்த்தப்பட்டோர்களாகவும் ஊழியம் செய்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள் என்கின்ற யதார்த்தம் மறுக்கப்படமுடியாதது ஆகும்.
எனவே பஞ்சமர் எனும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கும் ஐந்து சாதிகளையுமே யாழ்ப்பாணத்தில் ‘தலித்’ மக்கள் எனக் குறிப்பிட முடியும்.
மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சாதியமைப்பு பொதுவான அம்சமாக இருந்தபோதிலும் அதன் அதிகாரப்படிநிலையிலும் அந்த அதிகாரத்தினை பேணுகின்ற தன்மையிலும் வேறுபட்ட தன்மையினைக் காணலாம். அதாவது மட்டக்களப்பில் முக்குவர் அதிகாரப்படிநிலையில் உயர்வான இடத்தைப் பெறுகின்ற அதேவேளை யாழ்ப்பாணத்தில் அவர்கள் கீழான இடத்தில் இருப்பதையும் மட்டக்களப்பில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்களை விட யாழ்ப்பாணத்தில் மேலும் இரு சாதிகள் இடம்பெறுவதோடு சாதிக்குள் சாதி என்கின்ற உபபிரிவுகளும் காணப்படுவதும் மட்டக்களப்பில் சாதிக்குள் சாதி என்கின்ற உபபிரிவுகள் இல்லாமலிருப்பதும் அதிகாரப்பேணுகை நெகிழ்ச்சித்தன்மையுடையதாக இருக்க யாழ்ப்பாணத்தில் கடும் இறுக்கமானதாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாண சாதியமைப்பின் இறுக்கத்தன்மைக்கும் அதன் அதிகாரப்படிமுறைக்கும் யாழ்ப்பாண நிலமானிய முறையினை காரணமாகக் கொள்வர். அவ்வாறெனில் நிலமானிய முறை நிலவிய தென்னாசிய நாடுகளைத் தவிர்ந்த நாடுகளிலெல்லாம் சாதியமைப்பும் பொதுவான ஒன்றாக இருந்திருக்க வேண்டும் அவ்வாறின்றி இந்தியாவுக்கும் அதனோடிணைந்த தென்னாசிய நாடுகளுக்கும் இது பொதுவாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம் இது மதத்துடன் கொண்டுள்ள உறவேயாகும். இவ்வாறு கூறும்போது சாதியமைப்பிலும் அதன் அதிகாரப்படிநிலைப் பேணுகையிலும் நிலமானியமுறைக்கு தொடர்பு இல்லை என்று அர்த்தமாகாது. மதமும் அதுசார்ந்த கருத்து நிலையும் அந்தந்தப் பிரதேச நிலமானியங்களுடன் எவ்வாறு செயலாற்றியிருக்கின்றது என்பது முக்கியமானதாகும். இந்த நிலையில் நின்று நோக்கும் போது மட்டக்களப்பு, யாழ்ப்பாண நிலமானிய முறைகளையும் அவற்றின் கருத்தநிலைகளுக்குமான வேறுபாட்டினை துல்லியமாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். இந்த வேறுபாட்டின் நிலை இப்பிரதேச சாதியமைப்பிலும் அதன் அதிகாரப் பேணுகையிலும் தெரிவது தெளிவாகின்றது. யாழ்ப்பாணத்து நிலமானிய முறை பற்றியும் அதன் கருத்து நிலை பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவது முக்கியமானதொன்றாகும்.
யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பு விவசாய மேன்மையடிப்படையில் நிறுவப்பட்டது. குடியேறிய நாள் முதல் அந்நியராட்சி வரை விவசாய நிலச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வெள்ளாளரே. விவசாயப் பொருளாதார அடிப்படை காரணமாகவே குடிமக்கள் என்ற கோட்பாடு தோன்றிற்று. விவசாயத் தொழிலாளர்கள் குடிமக்களாயினர். நிலவுடமைமைச் சமுதாயமாகவே இது இயங்கிவந்தது. யாழ்ப்பாணத்து அரசின் தோற்றத்தை ஆராயும் பொழுது பிரதேச நிலவுடமையாளரிடையே மன்னன் சிறந்த நிலையை எய்திருந்தான் என்பது தெரியவரும். நிலவுடமை ஆட்சிக்குள்ள பன்முகப்படுத்தப்பட் அதிகார நெறி (Decentralised Authori) காரணமாக நிலவுடமையாளரே அதிகாரிகளாகவுமிருந்தனர். யாழ்ப்பாணப் புவியியலமைப்புக் காரணமாக பிறதொழில்களும் அங்கு(அந்தப் பூர்வீக உற்பத்திச் சாதன நிலையில்) வளரமுடியவில்லை. இதனால் விவசாய நிலவுடமையாளர் மிக முக்கிய இடத்தைப் பெற்றனர். யாழ்ப்பாணத்து நிலவுடமைச் சமுதாயத்தின் சிறப்பம்சங்களில் மேற்கூறியது முக்கியமானது. (சிவத்தம்பி.கா,2000 பக்.12,13)
இந்த வெள்ளாள மேலாண்மை காரணமாக இன்னொரு கருத்து நிலையும் வளர்ந்துள்ளது. வருண அடிப்படையில் வேளாளரும் சூத்திரரே. சூத்திரரே இறுதிக் குழுமத்தினர். இந்த இக்கட்டு நிலையிலிருந்து விடுபடுவதற்காக இங்கு சூத்திரரை இரு வகையாக வகுத்து நோக்கும் ஒரு முறைமையுண்டு.
சற்சூத்திரர்
அசற்சூத்திரர்
சற்சூத்திரர் என்போர் உயர்ந்தோர். இந்தக் கொள்கையினை யாழ்ப்பாண மட்டத்தில் மிகவும் வற்புறுத்தியவர் ஆறுமுகநாவலர் ஆவார். ( பிரபந்தத் திரட்டு)
மேலும் சற்சூத்திரரின் மேலாண்மைக்கு ஒரு கருத்து நிலை முக்கியத்துவம் வழங்குவதற்காக, வருண தர்மத்திலே பேசப்படாத இன்னொரு குழுமத்தைப்பற்றி (ஐந்தாவது வருணத்தைப்பற்றி) அழுத்திப் பேசவேண்டிய நிலையேற்பட்டது. “பஞ்சமர்” என்னும் கோட்பாடு யாழ்ப்பாணத்திற் சமூக வன்மையுடைய ஒன்றாகும்.” (சிவத்தம்பி.கா, 1993 பக்.15)
நாவலரின் ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்தாக்கம் சாதாரண மக்களின் வழிபாட்டுமுறைகளையும் தெய்வங்களையும் சமஸ்கிருதநிலைப்படுத்தியதுடன் அதனுடன் சேர்ந்த அதிகாரப்படிநிலை உறவையும் இறுக்கமாக்கியது. அத்துடன் அவர் தன்னுடைய கல்விக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் பொருத்தமற்றவராகவே இருந்திருக்கின்றார். நாவலர் கல்வி பற்றிக் கூறும்போது,
“கல்வி இளமைதொட்டு மரண பரியந்தம்வரை விடாமற் கற்கவேண்டும்” என்றார். “வித்தியாதானத்திற்கு சமமானதாம் ஒன்றுமில்லை. வித்தியாதானமே எல்லாத் தானத்திலும் சிறந்ததென்பார். இவரால்1848 இல் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவப்பட்டது. சுதேச கல்விக்கு வித்திட்டு கல்விக்கு சிறந்த வரைவிலக்கணம் கூறிய இவரே தேசவழமை சக்திக்குட்பட்டு, சாதிவெறிகாட்டி தமிழ் மக்களில் ஒரு சாராரின் கல்வி உரிமையினை, சமூக உரிமைகளை மறுத்தார். அவர் எழுதிய சைவ வினாவிடைகளில் சாதிவேறுபாடுகள் அப்பட்டமாக காண்பிக்கப்பட்டன, கற்பிக்கப்பட்டது. அவரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளிலும் கல்வியுரிமை தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டது. வித்தியாதானத்திற்கு சமமானது ஒன்றுமில்லையென்று கூறிய அவரே சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு வித்தியாதானம் செய்து வைக்க மறுத்தும் இருக்கிறார். இளமை தொட்டு மரணப் பரியந்தம் வரை விடாமல் கற்கவேண்டுமென்று கூறிய அவரே ஒரு சாராரின் கல்விக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கின்றார்.(சந்திரபோஸ்.எஸ்,1989,பக்.15)
இங்கு நாவலர் கொள்கை ரீதியாக ஜனநாயகபூர்வமான கல்விக்கொள்ளை பற்றிக் குறிப்பிட்டாலும் அவருடைய சமூக நடைமுறை அதிகாரப்படிநிலைத் தன்மையையும் அதன் இந்துத்துவ கருத்துநிலையினையும் பேணுவதினை மையமாகக் கொண்டதாகும். சமூகஜனநாயகமாக்கலைச் செய்ய வேண்டிய கல்வி நிறுவனங்கள் சமூக அநீதியை தேசவழமை அல்லது இந்துத்துவம் என்ற போர்வையில் ஆற்றி வந்திருக்கின்றன. இதனால் சமூகமைப்பினூடான அதிகாரப் பேணுகை வலுவானதாக இருந்திருக்கின்றதுஃஇருக்கின்றது.
இது போன்றே சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவாகளை நாவலரின் பண்பாட்டுப் பேற்றின் அரசியல் வாரிசாக பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவதோடு இராமநாதன் தொடர்பான மூன்று விடயங்களை சுட்டிக்காட்டுகின்றார்.
1. வெள்ளாளரல்லாத மாணவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கு சமபோசனம் வழங்கவதை எதிர்த்து 1930 இல் சேர்.பொன். இராமநாமநாதன் தேசாதிபதியைச் சந்தித்தார்.
2. உயர்ந்த சாதிகளுக்குரிய இறுதிக்கிரியை முறைகளை உயர்ந்த சாதியல்லாதவர் பின்பற்றியமைக்காக அதனை எதிர்த்தவர்கள் குற்றவாளிகளாகக்காணப்பட்ட போது தேசவழமைப்படி அவர்கள் ஊர்வலத்தை நிறுத்த உரிமையுடையவர்கள் என வாதிட்டார்.
3. சர்வஜன வாக்குரிமை வழங்கப்படக்கூடாது எனக் கருதினார்.
சேர்.பொன். இராமநாமநாதன் போன்றவர்களுடைய இவ்வகைப்பட்ட செயற்பாடுகள் சமூக அதிகாரத்தினை வெள்ளாளத்தலைமை இழந்துவிடக் கூடாது என்கின்ற விடாப்பிடியான போக்கினையே காட்டுகின்றது. இந்த விடாப்பிடியான போக்கு ஒரு சமூக உளவியலாக இன்றுவரை யாழ்ப்பாணமக்களிடம் இருப்பதனை அவர்களுடைய நடத்தையினை அவதானிக்கின்ற போது கண்டுகொள்ளமுடியும்.
தொடரும் 

0 commentaires :

Post a Comment