6/25/2020

மனம் திறக்கும் வைத்தியகலாநிதி அசோகன் ஜூலியன்

மாற்றத்தை நோக்கிய பயணம்.....
என்னை பற்றி..  மனம் திறக்கும் வைத்தியகலாநிதி அசோகன் ஜூலியன்
நான்  அசோகன் ஜீலியன் பாலசிங்கம், நாவற்குடாவை பூர்வீகமாகக் கொண்ட மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்தின் முன்னாள் மாவட்ட அதிகாரி அமரர் சி. பாலசிங்கம், காலஞ் சென்ற முன்னாள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆங்கில ஆசிரியை திருமதி ஜெயராணி பாலசிங்கம்  அவர்களின்  புதல்வராவேன்.
புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவனாகிய நான் யாழ் பல்கலைக்கழத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில்ரீதியாக மருத்துவராக 30 வருடங்கள்  சேவையாற்றியுள்ளேன்.
எனது குடும்பம்
எனது  மனைவி விசேட வைத்திய நிபுணர்.
எனக்கு  இரு புதல்வர்கள். இருவரும் மருத்துவ பீட மாணவர்கள்..
ஏன் அரசியலில்
பாராளுமன்ற உறுப்பினர் என்ற பட்டத்தை எனது பெயருக்கு பின்னால் போடுவதற்காகவோ அல்லது பாராளுமன்ற கதிரையை சூடாக்குவதற்காகவோ அல்லது காந்தி பூங்காவின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்காகவோ, அல்லது பாடசாலை பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக செல்வதற்காகவோ,அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காகவோ அல்லது நான்
தேர்தலில் போட்டியிடவில்லை.
30 வருடங்களுக்கு முன் எனது பெயருக்கு பின் பட்டத்தை சுமந்தவன். நடுத்தர ஆசிரிய குடும்பத்தில் பிறந்த நான் இலவச கல்வியால் பட்டத்தையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவன்.
மட்டக்களப்பின் நிலமை
எமது மாவட்டத்திலேயே 35 வயதை தாண்டியும் இளைஞர் யுவதிகள்  தொழில் வாய்ப்பற்று வீட்டில் இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சிறுவர்கள் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பாடசாலை படிப்பை துறந்து வீதியிலே வியாபாரம் செய்யும் துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டமே வறுமையில் முதலிடத்தில் காணப்படுகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நீர், மலசலகூடம், தரமான வீடுகள் என அடிப்படை வசதிகளற்று  ஓலை குடிசைகளில் மக்கள் வாழும் அவலமான நிலைமை காணப்படுகிறது.
பெண்களை தலைமையாக கொண்ட  போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளினது
வாழ்க்கை போராட்டத்துக்கு ஒரு  நிரந்தரமான தீர்வு காணப்படாமல் அவலமான நிலைமையில் வாழும் நிலைமை காணப்படுவதுடன் ஒவ்வொரு தேர்தல்களிலும் பேசும் விடயமாக காணப்படுகின்றது.
இனத்தின் மேல் கொண்ட உணர்வுகளால் வலியை சுமந்து தமது கல்வி மற்றும் வாழ்க்கையை  தொலைத்து நிற்கும்  ஆயிரக்கணக்கான சகல போராட்ட இயக்கங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கான எமது உறவுகள்  நிர்க்கதியற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் ஜீவனோபாய போராட்டத்துக்கு
முன்னுரிமை கொடுத்து  அவர்களை வாழ்க்கையில்  மீளக்கட்டியெழுப்ப வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
என்னால் முடியும்
நான்  மட்டக்களப்புக்கு சொந்தமானவன்.
மட்டகளப்பு, நான் பிறந்த மண்; என்னை வாழவைத்த மண். எனது தமிழ் உறவுகள்  தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது. எனது தமிழ் சமூகம்
மாற்றானிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. 
அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். மாற்று  சமூகத்துக்கு நிகராக எமது தமிழ் சமூகமும் வாழவேண்டும்.
அதனை என்னால் செய்யமுடியும். அதற்கான  தகுதியும் ஆளுமையும் என்னிடம் உண்டு.
எனவே எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்னால் மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்த முடியும்.
எனவே உங்கள்
முதலாவது வாக்கை  சரித்திரநாயகன்   முன்னால் முதலமைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தனின் அவர்களின்  படகு சின்னத்துக்கு புள்ளடி X இட்டு
இலக்கம் 8  X க்கு அளிக்க வேண்டியது  ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.
என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டால்.......
உங்கள் இரண்டாவது விருப்பு வாக்கை எனது இலக்கம்  4 X க்கும் வழங்குங்கள்.
நான் உங்களை மாற்று சமூகத்துக்கு சமனாக மாற்றானிடம் கையேந்தாமல் நிரந்தர வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி உங்களை வாழ வைப்பேன் என உறுதியளிக்கின்றேன்.
பசிக்கிறது என்று சோறு கேட்பவனுக்கு சாப்பாட்டு பார்சல் கொடுத்து முகநுலில் படம் போடுவது தேச அக்கறையுள்ள ஒருவனுக்கு அழகு அல்ல.
விதை நெல் கொடுத்து ஆயுட்காலம் முழுவதும் கையேந்தாமல் அவன் உண்ண, உணவுக்கு வழி செய்பவனே உண்மையான மக்கள் தொண்டன், மக்கள் சேவகனாவான்.
உங்கள் அன்பின்
டாக்டர் அசோகன் ஜுலியன் பாலசிங்கம்  MBBS
தொடரும்......
»»  (மேலும்)

நான் உங்கள் பிள்ளையான் பேசுகிறேன்,


 captionநான் உங்கள் பிள்ளையான் பேசுகிறேன்,
என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, உழைக்கும்  மக்களே, உத்தியோகஸ்த்தர்களே,  மாணவர்களே! உங்கள் அனைவரோடும் ஒரு  சில நிமிடங்கள் உரையாட  விரும்புகின்றேன்.
எமது அரசியல் வரலாறு என்பது சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக மேட்டுக்குடி தலைமைகளினால் பிழையாக வழிநடத்தப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக நாம் நமது சொந்த  மூளைகளை தொலைத்து நிற்கின்றோம்.
எமது நாட்டில் நடைபெறுகின்ற ஒவ்வொரு ஆட்சி அதிகார மாற்றங்களிலும் எமது மக்களின் குரல்கள் பலவீனப்பட்டு போயுள்ளன. தனி நாட்டுக்காக போராடிய ஓர் இனம் இன்று கிழக்கில் தனது இருப்பிற்காக போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வந்து நிற்கின்றது. எம்மைச் சூழ   எழுந்து நிற்கின்ற அதிகார வர்க்கங்களை எப்படி நாம் எதிர்கொள்ளப் போகின்றோம்?
மட்டக்களப்பான் மதியிழந்து மட்டுமன்றி மானம் இழந்தும் நின்றான் என்று எமது எதிர்கால சந்ததிகள்  எம்மை  தூற்றவேண்டுமா? இல்லையா? என்பதை நிச்சயிக்கப் போகின்ற தருணமாக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் அமையப் போகின்றது. இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய கடமைப்பாடு மண்ணின் மைந்தன் ஆகிய எனக்குண்டு.
எமது கட்சியானது காட்டிலும், கடலிலும், நெருப்பிலும் கூட புடம் போட்டுப்பட்டு நிமிர்ந்து நிற்கும் கட்சியென்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பலவிதமான இன்னல்களையும் உயிரிழப்புகளையும், தியாகங்களையும் தாண்டி வந்த புலிகள் நாங்கள். ஆனால் எமது வளர்ச்சியையும் தனித்துவத்தையும் சிதறடித்து, சீர்குலைக்க நாலாபுறங்களிலும் இருந்தும் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அத்தகைய சதிகளில் ஒன்றே இந்த பிள்ளையான் மீதான அரசியல் பழிவாங்கலாகும். இன்றும் கூட கிழக்கின் தனித்துவத்தைக் கட்சியை அழித்தொழிக்க  பலமுனைகளிலிருந்தும் போலித் தமிழ் தேசியவாதிகள் களமிறங்குகின்றனர். ஆனாலும் நாம் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி கிழக்கின் தனித்துவம், கிழக்கின் தலைமை என்று எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் உரிமை குரல்களையும் உயர்த்தி பிடித்து நிற்கின்றோம்.
  எதிர்வரும் தேர்தலில் எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் விருப்பங்களுக்கும் வேண்டுகோளிற்க்கும் மதிப்பளித்து எமது தனித்துவ அடையாளமாகிய படகு சின்னத்தில் களமிறங்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை எடுத்துள்ளோம்.
  எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை தொடக்கமாக வைத்து கிழக்கு தமிழர்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அந்த ஒற்றுமை ஊடாக படகு சின்னத்துக்கு வரலாறு காணாத வெற்றியை ஈட்டித்தர வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் உங்கள் பிள்ளையான்.
»»  (மேலும்)

மீண்டும் மீண்டும் ஏமாறும் மக்கள்.

திருகோணமலை மாவட்டம்.
தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி, தமிழ்தேசியக் கூட்டமைப்பு மாறும்
தமிழர் அரசியல் 
  Trincomalee District, Sri Lanka: Access information updated as of ...

திருகோணமலை மாவட்டம் மாவட்டத் தேர்தல் முறமை வருவதற்கு முன்னர் மூன்று உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பியது.பின்னர் அது நான்கு உறுப்பினர்கள் ஆனது.மூதூரில் திருமிகு ஏகாம்பரம், திருமிகு.தங்கத்துரை ஆகியோர்களைத் தவிர தொகுதித் தேர்தல் முறைமையில் எந்த ஒரு தமிழரும் தெரிவாகவில்லை.

வட பகுதியில் முல்லைத்தீவு எனும் தொகுதியை பெறுவதற்காக காவு கொள்ளப்பட்டது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி.
1989 தேர்தலைத் தவிர மற்ற எல்லாக் காலத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி தமிழர் கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என மாறு ரூபம் கொண்டாலும் ஒரே கட்சி சார்ந்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். அல்லது 1947முதல் மூதூரில்  சுயேட்சையாய் போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவளித்தமையும் வரலாறு.மூதூருக்கு திருகோணமலையிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றவர்களும் இவர்களே.ஒரு தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியில் கேட்ட ஒருவரை அடுத்த தேர்தலில் தங்கள் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றவர்களும் இவர்களே.

1977ல் திருகோணமலை மக்களின் பெரும்பான்மையோர் தங்கத்துரை அவர்களை வேட்பாளராக போடும்படி கேட்டும் சம்பந்தர் ஒரு சட்டத்தரணி என்ற காரணம் சொல்லி வேட்பாளராக்கி வெற்றி பெற்றவர்களும் இவர்களே.தங்கத்துரை அண்ணன் பின்னர் சட்டத்தரணியாக தன்னை வளர்த்துக் கொண்டது தனிக் கதை 1994 தேர்தலில் தங்கத்துரை அண்ணன் வென்றது ஒரு பதிலடியாய் உருவானமையும் அவர் சாதனை. அதுவும் ஒரு சதி வலையில் 1996ல் படுகொலையாய் மாறியமையும் இவர்கள் வரலாறுதான்.
1947ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டைத் தவிர திருகோணமலை மாவட்டத் தமிழர் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் இவர்களே.

திருமிகு.சிவபாலன்
திருமிகு.ஏகாம்பரம்
திருமிகு.இராஜவரோதயம்
திருமிகு.மாணிக்கராஜா
திருமிகு.அ.தங்கத்துரை
திரு.பா.நேமிநாதன்

1965ல் மூதூரில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முகமதலி அவர்கள் அடுத்த வருசமே ஐக்கியதேசியக் கட்சியில் ஐக்கியமானது வரலாறு. 2001 முதல் அண்மைக் காலம் வரை திரு.இரா.சம்பந்தன் திரு.க.துரைரட்டினசிங்கம் இதில் ஒரு முறை மாவட்ட ரீதியில் வெற்றி பெற்ற திரு.துரைரெட்டினசிங்கம் அவர்கள் பின்னர் தேசியப் பட்டியல் எம்பியாகிறார்.
1989 ல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ராஜாவையும் பசீரையும் தவிர இவர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர்.

ஒட்டு மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் நடத்தப் பட்ட எல்லாக் குடியேற்றங்கள் அத்து மீறல்கள் எல்லாவற்றுக்கும் இவர்களே சாட்சி .
இனியும் சாதிக்க என்ன இருக்கு எல்லாம் முடிந்து தமிழர்கள் மூன்றாவது நிலைக்கு தள்ளப் பட்டும் தொல் நிலங்கள் துண்டாடப் பட்டும் வந்த வரலாறு இவர்கள் காலமே.

இவற்றைத் தடுக்க இவர்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை .
இன்னும் இன்னும் பழைய பெருங்காயப் பானையோடு அலையும் இவர்கள் .
தேர்தல் கால அரசியல் மட்டுமே ஒவ்வொரு  முறையும் புதிய புதிய வேட்பாளர்கள் போடு காய்களாய் வர அடுத்த முறை அவர்கள் காணாமல் போவார்கள்.

உலகில் எங்கும் காணா இணையிலா அரசியல் இவர்களது.
மீண்டும் மீண்டும் ஏமாறும் மக்கள்.
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக்கழகம்
நன்றி முகநூல்  
»»  (மேலும்)

6/23/2020

சாத்திரம் சொல்லும் யாழ் மேலாதிக்கம்மா. மங்களேஸ்வரி சங்கர் - M.Mangaleswary Shanker ...

இம்முறை நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பான செய்திகளில் தமிழ் தரப்பு  பெண் வேட்பாளர்கள் தேர்வு குறித்து அதிகம் பேசப்பட்டுவருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்   தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள திருமதி மங்களேஸ்வரி சங்கர் என்பவர் இச்செய்திகளினுடாக  சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார்.

தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன் மட்டக்களப்பில்  மங்களேஸ்வரி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராவார்' என்று பரவலாக நம்பப்பட்டது. தமிழரசு கட்சி பாரம்பரியத்தை கொண்டவராக மட்டுமன்றி தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்தவர் மங்களேஸ்வரி ஆகும். இந்நிலையில்  தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள்  பலரின் முயற்சியிலேயே  மங்களேஸ்வரி தேர்தலில் களமிறங்க முடிவு செய்தார். அதேபோல   வேட்பாளருக்கான நியமனம்  கோரும்  விண்ணப்பத்தை  இன்பராஜா விதானையார் எனப்படுகின்ற  தமிழரசு கட்சியின் மூத்த  தலைமுறை செயற்பாட்டாளர் ஒருவரே தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் அவர்களிடம்  மங்களேஸ்வரி சார்பாக கையளித்துமிருந்தார்.

அதேபோல வெளிநாடுகளில் குறிப்பாக சுவிஸில் வாழும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மிக நெருக்கமான இரு  ஊடகவியலாளர்கள்     தமிழ் தேசிய கூட்டமைப்பானது  மங்களேஸ்வரிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குவதை சாத்தியமாக்க  பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்துக்கும் மேலாக மங்களேஸ்வரியே நேரிடையாக கொழும்பில் வைத்து சுமந்திரன்  அவர்களை சந்தித்து தனக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும்  மத்தியில்தான்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் மங்களேஸ்வரிக்கான வாய்ப்பு அதிர்ச்சிதரும் வகையில் மறுக்கப்பட்டது. அதேவேளை  மட்டக்களப்பை சேர்ந்த மற்றுமொரு  பெண்ணிய செயற்பாட்டாளரான   நளினி என்பவருக்கு  அந்த வாய்ப்பு வழங்கப்படப்போகின்றது என்கின்ற செய்திகள் பரவியபோதிலும் இறுதியில் பெண் பிரதிநிதித்துவங்கள் எதுவுமின்றி  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டு விட்டதாக  செய்திகள் கசிந்தன.

இந்நிலையில்தான் சட்டத்தரணியும் மனிதவுரிமை மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளராகவும் அறியப்பட்ட சிறந்த ஆளுமையான  மங்களேஸ்வரியை தம்பக்கம் ஈர்ப்பதில்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சந்திரகாந்தன் முனைப்புக்கொண்டார். எட்டு வேட்பாளர்களில்  சிறந்த ஆளுமைகளாக தெரிவாகியிருந்த ஏழு ஆண்களையும் உறுதிசெய்துகொண்ட நிலையில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மங்களேஸ்வரியை உள்வாங்குவதென்பதில் சந்திரகாந்தன் வைத்த குறி தவறவில்லை. மங்களேஸ்வரியின் சொந்த ஊரான முனைக்காடு ஏலவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவுத்தளம்மிக்க ஒரு கிராமமாகும். அந்த சூழலை சந்திரகாந்தன் சரியாக பயன்படுத்திக்கொண்டார். அக்கிராமத்து  இளைஞர் யுவதிகளை கொண்டே மங்களேஸ்வரியை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வேட்பாளராக்குவதில் வெற்றிகண்டார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த  நம்பிக்கை துரோகத்தினால் மனமுடைந்திருந்த மங்களேஸ்வரி பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய தயாராக  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடமிருந்த  ஜனநாயக இடைவெளியை தனக்கானதாக்கிக்கொண்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வாக்கு வங்கியை தாண்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான வாக்காளர்களை கவர்வதில் மங்களேஸ்வரி தீவிரமாக வெற்றிகண்டு வருகின்றார். மங்களேஸ்வரியின் வெற்றிநோக்கிய நடையினால்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளரும் செயலாளருமான துரைராசசிங்கம் உட்படபே  சுமந்திரன் கூட நிலைகுலைந்து போயுள்ளனர். சுமந்திரனின் அண்மைக்கால நேர்காணல்களில் இதனை அவதானிக்கலாம்.

 சுமந்திரன் செல்லுமிடமெல்லாம் மங்களேஸ்வரிக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்த கேள்வியை எதிர்கொள்ள நேரிடுகின்றது. வேட்பாளர்   நியமனம் கோருகின்ற ஒருவரை நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கமுடியும். கேட்பவர்களுக்கெல்லாம் நியமனம் வழங்க முடியாது. அவற்றை சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துபோக  வேண்டிய நிலையில்  சுமந்திரனோ  தமிழர்தம் அரசியலில் மிகவும் மலின யுத்தியான 'துரோகி' குற்றச்சாட்டை கையிலெடுத்துள்ளார். 

அதாவது மங்களேஸ்வரிக்கு நியமனம் வழங்காமை குறித்து அவர் தெளிவாக கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார் "அவருக்கு நியமனம் வழங்க கூடாது என்பதற்கான  பலவிடயங்களை உயர்பீடத்தில் முன்வைத்தேன்,அவற்றையெல்லாம் விபரிக்க முடியாது,ஆனால் அவரை நாங்கள் ஏன் நிராகரித்தோம் என்பது இப்போது புரியும்,அவர் இப்போது பிள்ளையானோடு இணைந்துகொண்டுள்ளார்"  சுமந்திரனின் பார்வையில் பிள்ளையான் துரோகி, அவரோடு இணைந்து கொண்டு மங்களேஸ்வரியும் துரோகியாகி விட்டார் என்பதுதான் அவரது கருத்தாகும். 

அதாவது தேர்தலுக்கு பின்னர் இதுபோன்ற 'துரோக'த்தை மங்களேஸ்வரி செய்வார் என்று சுமந்திரன் ஆருடம் சொன்னாராம்.அது இப்போதே பலித்துவிட்டதாம். எப்படியிருக்கிறது?.
பரம்பரை தமிழரசு கட்சி குடும்பமேயானாலும்,தமிழரசு கட்சி தூண்களே  கொண்டுவந்து நிறுத்தினாலும்  "தமிழ் தேசியத்தின் வாழ்நாள் சாதனையாளர்களே" நற்சான்றிதழ் கொடுத்தாலும்,மங்களேஸ்வரியே வந்து சுமந்திரனிடம் வேண்டுகோள்  விடுத்தாலும் நாங்கள் சந்தேகம் கொண்டே தீருவோம்  ஏனெனில் அவர் மட்டக்களப்பு என்பதுதானே இதன் அர்த்தமாக இருக்க முடியும். 

இப்படி சொல்லுவதற்கு எத்தகைய ஆதிக்க மனோநிலைவேண்டும்? இது மங்களேஸ்வரி என்கின்ற ஒரு நபரை மட்டும் அவமதிப்பதல்ல. மட்டக்களப்பு தமிழகத்தின்   ஒட்டுமொத்த மாந்தர்களையே  அவமதிப்பதாகும், அதுமட்டுமல்ல தமிழ் தேசியம் தமிழ்த்தேசியம் என்கிறீர்களே அந்த தமிழ் தேசியத்தையும் அவமதிப்பதாகும். குறித்த ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை துரோகிகள் என்கின்ற முன்முடிவுகளுடன்  அணுகுவதற்கு பெயர்தான் பிரதேச மேலாதிக்கம். யாழ்ப்பாணத்தாரை தவிர ஏனையவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல என்று பிரதேச ரீதியாக நீங்கள் சிந்தித்தால் அதுவே யாழ் மேலாதிக்கம். இந்தமேலாதிக்க அணுகுமுறையே அன்று இருபத்தைந்து வருடம் தமிழரசுக்கட்சியை கட்டிவளர்த்த பெருந்தலைவர் இராஜதுரையை தலைமைக்குரிய நம்பிக்கைவாய்ந்தவரல்ல என்று ஒதுக்கியது. இன்று மங்களேஸ்வரியை   நியமனம் கொடுக்காமலேயே தட்டிக்கழித்து ஒதுக்கியுள்ளது.

இத்தகைய அவமானத்தின் பின்னேரே மங்களேஸ்வரி மனம்மாறினார். தமிழரசுக்கட்சியின் மீது தான் கொண்ட நம்பிக்கையையிட்டு தன்னைத்தானே நொந்துகொண்டார். தமிழ் தேசியத்தின் காவலர்களாக நின்று  தலையால் மண்கிண்டினாலும் மட்டக்களப்பாளராகில் ஒருநாள் ஒதுக்கப்படுவீர்கள் என்கின்ற யதார்த்தம் தெரிந்திருக்கும். அப்போதுதான்  அவருக்கு பன்னிருவருடமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சொல்லிவரும் 'யாழ் மேலாதிக்கம்' என்பதன் அர்த்தம் புரிந்திருக்கும். யாழ் மேட்டுக்குடி தலைமைகளால்   தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு  நிகர்த்த பிறிதொன்று இனியொருபோதும் எந்தவொரு கிழக்கு மாகாணத்தவர்களுக்கும் நடக்க விடக்கூடாது என்கின்ற ஓர்மம் வந்திருக்கும்.  கிழக்கின் தலைமையை வலுப்படுத்தவேண்டும் என்கின்ற தர்மத்தின் ஆவேசம் எழுந்திருக்கும்.  அதன்பின்னரே அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வேட்பாளராக முடிவு செய்திருப்பார்.

மீன்பாடும் தேனாடான்    

»»  (மேலும்)

6/21/2020

யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சின்னம் பட்டம்!Afficher l’image source
வர்க்க ரீதியகவும் இனரீதியாகவும் சாதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள், தமது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள்.
அந்த அரசியலில் ஒரு சிறு பகுதியாக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் பட்டம் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகிறார்கள்.
தலித்துக்களுக்காக இப்போதெல்லாம் ஜிகாபைட் கணக்கில் முகநூலில் வாதிட்டுக்கொண்டிருப்பவர்கள் வாருங்கள்..
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் இணைந்து கைகோர்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஆதரவுக் கரத்தையாவது நீட்டுங்கள்..
செல்வம் கொழிக்கும் ஆதிக்க சாதிமான்களை எதிர்த்து நிற்கும் இந்த மக்களின் தேர்தல் முயற்சிக்கு பொருளையோ, குறைந்தது வார்த்தைகளையோ கொடுத்து உதவுங்கள்...
வார்த்தைகளின் நேர்மை நடைமுறையில் தான் உரசிப்பார்க்கப்படுகிறது.
»»  (மேலும்)