7/27/2020

அல்பிரட் துரையப்பா நினைவு தினம்--கொலைக்கலாசாரத்தை தொடக்கி வைத்த தமிழரசு கட்சியினர்

‘அமுது’ சஞ்சிகையின் 2000 ஆண்டு யூலை இதழில் குருசேத்திரன் என்பவர் எழுதிய கட்டுரையை கீழே மறுபிரசுரம் செய்துள்ளோம்)

Sundayobserver.lk: Features | LTTE's ferocity knew no bounds

1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 27திகதி யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா புலிகளால் சுட்டுக்கொலைச் செய்யப்பட்ட நாள் இன்று.

யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு அல்பிரட் துரையப்பாவே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இதே நாளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:-

*1983 - #கொழும்பு_வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

துரோகியாகவும்….தியாகியாகவும்…..
- குருசேத்திரன்


யாழ்ப்பாண மாநகர மேயர் திரு.அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு யூலை 27ம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் முன்றலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவர்கள் இன்றைய புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது சகாக்களும்.

துரையப்பாவின் கொலை இலங்கையில் தமிழர் வரலாற்றில் முதலாவது அரசியல் கொலையாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இக்கொலை தமிழர்களின் வாழ்வில் அரசியல் பயங்கரவாதத்தின் தொடக்கமாகும்.

இன்றைய தலைமுறையினரிடம் “துரையப்பா யார்?” என்றொரு கேள்வியைக் கேட்டால், “அவர் ஒரு தமிழினத் துரோகி” என்ற பதில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். ஏனெனில் இன்று தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்போராக இருப்பவர்கள், அவர் சுடப்பட்ட காலத்தில் சிறுவர்களாக அல்லது அச்சமயம் பிறந்தவர்களாக இருந்ததே.

துரையப்பாவை துரோகியாக இனம் காட்டிய “தளபதி” அமிர்தலிங்கமும், அவரது சகாவான “இளைஞர்களின் இதயக்கனி” யோகேஸ்வரனும் கூட பின்னர் தமிழினத் துரோகிகளாக புலிகளின் தலைவரால் இனம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்.

அதுமாத்திரமின்றி, துரையப்பாவைச் சுட்டுவிட்டு தனது வீட்டுக்கு புகலிடம் தேடி வந்த பிரபாகரனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்த யோகேஸ்வரனின் விதவை மனைவி சரோஜினியும் யாழ் மாநகர மேயர் என்ற மகுடத்துடன், “துரோகி” என்ற புலிகளின் மகுடத்தையும் தாங்கியவாறு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்.
தமது அரசியல் எதிரிகளை அரங்கிலிருந்து அகற்ற ஆரம்பித்த துரோக நாடகத்தின் சிருஸ்டிகர்த்தாக்களே அதே நாடகத்தில் துரோகிகளாக வேசம் கட்டப்பட்டதுதான் உச்சக்கட்ட துன்பியல் காட்சியாகும்.
எது எப்படியிருப்பினும், துரையப்பா சுடப்பட்ட காலத்து யாழ்ப்பாண அரசியலை, அக்கறையுள்ளவர்களுக்கு சொல்லி வைப்பது வருங்காலத்திலாவது தமிழர் வாழ்வுக்கு ஒளியேற்றப் பாடுபடுபவர்களுக்கு பயனாக இருக்கும்.

யாழ்ப்பாணப் பாராளுமன்றத் தொகுதி வடக்கு கிழக்கின் மற்றைய தொகுதிகளை விட சற்று வித்தியாசமான ஒரு தொகுதி. தமிழர்களின் தலைநகரம் போல கருதப்பட்ட இத்தொகுதியில் இயல்பாகவே எல்லா இனத்தினரும், எல்லா மதத்தினரும், எல்லாச் சாதியினரும், எல்லாத் தொழில்துறையினரும் நிறைந்து வாழ்ந்தனர். இத்தகைய ஒரு நகரின் செல்வாக்கு மிக்க மேயராக துரையப்பா திகழ்ந்தார். குறிப்பாக, ஏழை மக்கள், சாதி குறைந்த மக்கள், மீனவர்கள், கத்தோலிக்க மக்கள், அநாதரவான பெண்கள் என யாழ்ப்பாணச் சமூகத்தில் இரண்டாம்தர நிலையில் வாழ்ந்த மக்களே துரையப்பாவின் ஆதரவு சக்திகளாகும்.
இத்தொகுதியில் கணிசமாக வாழ்ந்த சைவ – வேளாள மேட்டுக்குடி மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தனர். அதிலும் குறிப்பாக, அந்தக் காலத்தில் வெளிப்படையாகவே சாதி வெறியும் சைவ வெறியும் கொண்டு நின்ற ஜி.ஜி.பொன்னம்பலத்தின் காங்கிரசுக்கே மேட்டுக் குடியினர் ஆதரவு கூடுதலாக இருந்தது.

இடதுசாரிகளின் கட்சிகளுக்கும் கணிசமான செல்வாக்கு இருந்ததால் அவர்களது ஆதரவும் பெரும்பாலும் துரையப்பாவுக்கே. இதனால் தமிழரசுக் கட்சியின் நிலை யாழ்ப்பாணத் தொகுதியில் சற்றுப் பலவீனமாகவே இருந்து வந்தது.
1956ம் ஆண்டுத் தேர்தலில் ஜி.ஜி.பொன்னம்பலம் யாழ்ப்பாண எம்.பியாகத் தெரிவானார். 60ம் ஆண்டுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட துரையப்பா யாழ்ப்பாண எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்தே அவரது செல்வாக்கு தெளிவாகும்.

1970ம் ஆண்டு மட்டுமே தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சி.எக்ஸ்.மார்ட்டின் 64 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். அதுவும் கூட ஒரு முன்னாள் நீதிபதி என்பதும், ஒரு கிறிஸ்தவர் என்பதுமான இரண்டு சாதகமான அம்சங்கள் அவரது வெற்றிக்கு அனுகூலமாக இருந்தன.
இருப்பினும் யாழ்ப்பாண நகரினதும் மக்களினதும் அபிவிருத்தி தேவைகளை கணக்கிலெடுத்த மார்ட்டின், வெற்றி பெற்ற சில நாட்களில் தமிழரசுக் கட்சியை விட்டு விலகி ஸ்ரீமாவோ அரசின் பக்கம் சேர்ந்து கொண்டார்.

இத்தகைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத் தொகுதி எப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு சவாலாகவே இருந்தது. ஊர்காவற்துறையிலும் சாவகச்சேரியிலும் ஒரு தடியை நட்டுவிட்டு தமிழரசுக் கட்சி என்று சொன்னாலும் மக்கள் வோட்டுப் போடுவார்கள் என்று அநாயாசமாகச் சொல்லும் தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் யாழ்ப்பாணத் தொகுதி என்று வந்தால் எப்போதும் மிக அவதானமாகவே இருப்பர்.
1972ல் ஸ்ரீமாவோ அரசு கொண்டு வந்த புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து தனது காங்கேசன்துறை தொகுதி எம்.பி. பதவியை இராஜினாமா செய்து இடைத் தேர்தலொன்றுக்கு வழிவகுத்த தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் அத்தேர்தலில் வென்ற போதும், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட வி.பொன்னம்பலத்திடம் 1970 பொதுத் தேர்தலை விட 1,000 கூடுதல் வாக்குகளை இழக்க நேரிட்டது.

இந்தச் சூழ்நிலையில் அரசியல் ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் துரையப்பாவின் செல்வாக்கை வீழ்த்த முடியாத தமிழ் தலைமை துரையப்பாவை வன்முறையின் மூலம் அழித்துவிட முடிவு எடுத்தது.
துரையப்பாவுக்கு தனிப்பட்ட முறையில் யாழ்ப்பாண மக்களிடம் செல்வாக்கு இருந்தது. துரையப்பா மாநகரசபை மேயராக மட்டுமின்றி, மக்களுடன் அதிகம் தொடர்புடைய யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். பல தமிழ்த் தலைவர்களைப் போலல்லாது பணம் வாங்காமல் ஏழைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞராகவும் இருந்தார். அத்துடன் அவரது மனைவி யாழ்ப்பாணத்தில் டாக்டராகவும் இருந்தார். தனது ஆதரவாளர்களின் நன்மை தீமை நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களின் நிகழ்ச்சிகளிலும் கூட அழைப்பில்லாவிடினும் தவறாமல் கலந்து கொள்ளும் ஒருவராக இருந்தார்.

அதிகாலையிலேயே துரையப்பாவின் வீட்டின் முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணுவதற்காக கூடி நிற்பதைக் காணலாம். இந்தக் காட்சியை வேறு எந்தவொரு தமிழ் அரசியல்வாதியின் வீட்டின் முன்னாலும் அப்போது காண முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய நவீன யாழ்ப்பாணத்தின் சிற்பி துரையப்பாதான் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையாகும். இவருக்கு முன்னர் யாழ் மாநகர அபிவிருத்தியில் சாம் சபாபதியே கூடுதல் அக்கறை கொண்ட மேயராவார்.
துரையப்பாவை அழிப்பதற்கு முன்னர் அதற்குத் தேவையான “துரோகி” முத்திரை குத்தலையும் பிரச்சாரத்தையும் தமிழ்த் தலைமை கனகச்சிதமாக மேற்கொண்டிருந்தது.

1974ல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட 4வது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சிகளின் போது தமிழரசுத் தலைமையாலும், தென்னிந்தியாவிலிருந்து வந்து கலந்து கொண்ட இரா.ஜனார்த்தனம் போன்றோராலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குழப்பங்களின் சூத்திரதாரியாக துரையப்பாவை இனம்காட்டி வேண்டுமென்றே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.

1972ல் கொல்வின் ஆர்.டி.சில்வா உருவாக்கிய, தமிழர்களைப் புறக்கணித்த புதிய அரசியல் சாசனத்தாலும், தமிழ் மாணவர்கள் மீதான பாரபட்சமான தரப்படுத்தல் முறையாலும் விரக்தியும் கோபமும் அடைந்திருந்த தமிழ் இளைஞர்களின் பொது விரோதியாக துரையப்பாவை தமிழ் தலைவர்கள் சித்தரித்து வந்தனர். 1965 – 69 காலகட்டத்தில் டட்லியின் ஐ.தே.க. அரசில் தமிழரசு – காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து தமிழர் உரிமைகளை காற்றில் பறக்கவிட்டதற்குப் பரிசாக 1970 பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தையும், உடுப்பிட்டித் தொகுதியில் மு.சிவசிதம்பரத்தையும் மக்கள் தோற்கடித்தனர்.

பாராளுமன்றத்திற்கு வெளியே விடப்பட்ட வேலையற்ற இத்தலைவர்கள் இருவரும் மூலை முடுக்கெல்லாம் சென்று கருத்தரங்குகள் நடாத்தி தமிழ் இளைஞர்களை அணிதிரட்டினர். சட்டவிரோத வேலைகளில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், 1977 தேர்தலில் தமிழர் கூட்டணி சார்பில் போட்டியிடக் காத்திருந்த யோகேஸ்வரன் வீட்டில் ‘துரோகிகளை’ ஒழிப்பதற்காக தொடர்ச்சியாக மேலதிக ஆலோசனைகளும் திட்டங்களும் இடம் பெற்றன.

தமிழர் கூட்டணியின் அங்குரார்ப்பணத்தை தனது வல்வெட்டித்துறை வீட்டில் முன்னின்று நடாத்திய முன்னாள் உப தபாலதிபர் ஞானமூர்த்தி துணிச்சல் மிக்க வல்வெட்டித்துறை இளைஞர்கள் சிலரை யோகேஸ்வரனுக்கும் இதர தலைவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். அவ்வாறு அறிமுகமாகி துரையப்பாவைக் கொலை செய்தவர்தான் இன்றைய புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன்.

துரையப்பா கொலை செய்யப்பட்ட போது விடுதலைப் புலிகள் உட்பட இப்போதுள்ள எந்த இயக்கமும் உருவாகி இருக்கவில்லை. தமிழர்களின் ஒரேயொரு ஏகபோக கட்சியாக தமிழர் கூட்டணியே விளங்கியது.
எனவே, ஒரு தொகுதியை வெல்வதற்கான அற்பத் தேவைக்காக, ஒரு மக்கள் செல்வாக்குப் பெற்ற நகர முதல்வரைக் கொலை செய்வதற்கு தமிழ் தலைமை திட்டமிட்டு செயலாற்றியது என மக்கள் நம்புவதற்கு இதுவே காரணம்.

தவிரவும், துரையப்பா கொலை செய்யப்பட்ட போது ஆயுதக் கலாச்சாரத்தின் தொடக்கத்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட எந்த தமிழர் கூட்டணித் தலைவரும் கண்டிக்கவில்லை. போதாததிற்கு சுட்டுவிட்டு வந்தவர்களுக்கு தேநீர் தயாரித்துப் பரிமாறியதை தான் சுடப்பட்டதற்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியொன்றில் யோகேஸ்வரன் எம்.பியின் மனைவி சரோஜினியே பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஆனால், துரையப்பாவின் கொலை யாழ்ப்பாணத்தில் அன்று பெரும் கவலையையும் கோபாவேசத்தையும் கிளறியதை நேரில் கண்டவர்கள் நன்கறிவர். கொலைச் செய்தி பரவியதும் சாதாரண பொதுமக்கள் கதறி அழுததுடன், பெரியாஸ்பத்திரியை நோக்கி ஆயிரக்கணக்கில் படையெடுத்தனர்.
அவரது இறுதிச் சடங்கின் போது, பூதவுடல் வைக்கப்பட்டிருந்த யாழ் நகர மண்டபத்திற்கு அதிகாலையிலிருந்து பொழுது சாயும் வரை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வந்து பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத யாழ். முஸ்லீம் பெண்கள் கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கில் அஞ்சலி செலுத்தக் காத்திருந்தனர்.
துரையப்பாவின் மரணச் சடங்கைத் தவிர யாழ்ப்பாணத்தில் அதிக மக்கள் கலந்துகொண்ட மரண நிகழ்வு தமிழர் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினுடையது மட்டுமே.
ஆனால் ஒரு வித்தியாசம் திரு.செல்வநாயகம் இலங்கை முழுவதும் அப்பொழுது வாழ்ந்த 35 இலட்சம் தமிழ் பேசும் மக்களின் தலைவராகவும் தந்தையாகவும் வர்ணிக்கப்பட்டவர். ஆனால் துரையப்பாவோ யாழ் நகரின் சில ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அரசியல் நடத்தியவர்.

துரையப்பாவுக்கு துரோக முத்திரை குத்தியவர்களும் பின்னர் அதே முத்திரையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டனர். ஆனால் தமிழ் பயங்கரவாதத்திற்கு இரையான முதல் களப்பலி என்ற வகையில் துரையப்பாவின் பெயர் மட்டுமே இறுதிவரை நிலைத்து நிற்கும் பெருமை பெற்றது.யார் குற்றம்?

இன்று யாழ்ப்பாண மாநகர மேயர் திரு.அல்பிரட் துரையப்பா (1975 ஆம் ஆண்டு யூலை 27ம் திகதி) பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் முன்றலில் சுட்டுக் கொல்லப்பட்ட தினம். 

ஒரு தொகுதியை வெல்வதற்கான அற்பத் தேவைக்காக, ஒரு மக்கள் செல்வாக்குப் பெற்ற நகர முதல்வரைக் கொலை செய்வதற்கு தமிழரசு  திட்டமிட்டு செயலாற்றியது  வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது சகாக்களையும் துரையப்பாவை சுட்டுக்கொல்ல தமிழரசு கட்சி பயன்படுத்தியது. 

எதிரியெனப்படுபவனை துரோகியென்று சுட்டுக்கொல்வதே இன்றுமுதல் தமிழர்களின் அறம்  என்னும் வரலாறு தொடக்கி வைக்கப்பட்ட 21 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் பிறந்தார்  பிள்ளையான். 

ஒரு லட்ஷம் கொலைகள் நடந்த நாட்டில் இந்த மட்டக்களப்பான்  மட்டும் விசாரிக்கப்படுகின்றானாம். 

நல்லாட்சி அரசில் தமிழரசு கட்சி மக்களுக்கு செய்த  கேவலமான சாதனை இதுதான்.

பொறுங்கடா மக்காள் இன்னும் எண்ணிச்சில நாட்கள் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.


0 commentaires :

Post a Comment