7/26/2020

ஐபிசி தமிழ் பொறுக்கிகளின் கூடாரம். புருஷோத்தமன் தங்கமயில்

ஐ.பி.சி தமிழ்: பொறுக்கிகளின் கூடாரம்!  

இலண்டனை தளமாகக் கொண்டியங்கும் ‘ஐ.பி.சி தமிழ்’ என்கிற ஊடகம், ஊடக விழுமியங்கள்- அறம் சார்ந்து என்றைக்குமே இயங்கி வந்தது இல்லை. தொடர்ச்சியாக ஊடகப் பொறுக்கித்தனங்களின் உச்ச கட்டங்களையே பதிவு செய்து வந்திருக்கின்றது. இந்தத் தேர்தல் கால நிகழ்ச்சிகளைக் காணும் போது, அதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

அதற்கு சின்ன உதாரணம் தான், நான் பின்னூட்டப் பகுதியில் இணைத்திருக்கின்ற ‘Tea கடை’ என்கிற நையாண்டி(!) அரசியல் நிகழ்ச்சி. அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகள் உலகம் பூராக ஊடக சூழலில் இருக்கும் ஒன்றுதான். அதில் பிரச்சினையில்லை. ஆனால், அதில் தரமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும்.

தங்களை தமிழ்த் தேசியத்தின் காவலாளிகளாக தொடர்ந்தும் காட்சிப் படுத்தி வரும் ஐ.பி.சி. கும்பல், இந்த நையாண்டி நிகழ்ச்சியில், எந்தவித அடிப்படை அறிவும் அறமும் இன்றியும், பெண்களை கேலிப் பொருளாகச் சித்தரித்தும் பேசிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் அந்த இரண்டு பேரும், ஆணாதிக்க அசிங்கங்களின் ஒட்டுமொத்த உருவங்களாக நிற்கிறார்கள். எளிய மொழியில் சொல்வதானால், கழிசடைகள்.

“இரண்டு பிகர்களோட ஐ.நா.க்குப் போறியள், மேக்கப் போட்ட சிலுக்கு, எங்களுக்கு பிகர்களைக் காட்டுகிறீர்கள் இல்லை....” இப்படியான உரையாடல் நிகழ்ச்சி பூராவும் பேசப்படுகின்றது. இதில், ஆங்காங்கு சிரிப்பு வேறு. 

ஜனாதிபதி சட்டத்தரணி என்பதன் அடிப்படை அர்த்தமே தெரியாமல், அரசியல் பேசிக் கொண்டிருக்கும் இந்த இரு பண்ணாடைகளும் ‘ஜனாதிபதியின் சட்டத்தரணி’ என்று விடயத்தைத் திரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

ஐ.பி.சி.யின் இன்னொரு விவாத நிகழ்ச்சியில் தோன்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஊடகத்தின் ஆசிரியரான நிராஜ் டேவிட், தாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண், சமூகத்தின் காவல் நாய்கள் என்று கூறுகிறார். ஆனால், அவரது மேற்பார்வையில் வரும், இந்த நிகழ்ச்சியில், இரு பெண்களைப் பற்றி, எந்தவித அடிப்படையும் இல்லாமல் பேசிக் கொண்டிருப்பதை எப்படி ஊக்குவித்து, ஒளிபரப்புகிறார்? இவ்வளவு கீழ்த்தரமான மனகிலேசங்களோடு இருக்கின்றவர்கள்தான், தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் என்றால், தமிழ்த் தேசியம் கறை படிந்ததாகிவிடும். 

நிராஜ் டேவிட் கலந்து கொண்டிருந்த அதே நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் பா.நடேசனும் கலந்து கொண்டு தாயக அரசியல் பற்றியும், தேவை பற்றியும், அறம் பற்றியும் பேசுகிறார். நான் நினைக்கிறேன், அவர் ‘தமிழ் சொலிடாரிட்டி’ என்கிற இயக்கத்தின் ஒரு உறுப்பினர் என்று. சமூக அநீதிகளுக்கு எதிராக பிரித்தானியாவில் இருந்து போராடுகின்ற இயக்கம் அது. இந்தியா, இலங்கை தொடங்கி எங்கு சமூக அநீதிகள் இடம்பெற்றாலும், அதற்கு எதிராக பொங்குவார்கள்; போராடுவார்கள். ஆனால், பெண்கள் இருவரை, ‘பிகர்கள், மேக்கப் போட்ட சிலுக்கு, அவர்களை கொண்டு திரியிறார்’ என்கிற உரையாடல்களை பேசுகின்ற ஊடகத்தைக் கண்டு கொள்வதும் இல்லை. கண்டிப்பதும் இல்லை. நடேசன் என்கிற இளைஞர், எந்த அறத்தின் அடிப்படையில், இவ்வாறான நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும், நிராஜ் டேவிட்டோடு ஒரே விவாத அரங்கை பகிர்ந்து கொள்கிறார்?

அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்பது என்பது, அசிங்கங்களை அரங்கேற்றுவது அல்ல. அதுபோல, மஞ்சள் பத்திரிகைகளின் வேலைகளை தொலைக்காட்சி வழி செய்வதுமல்ல. அதுவும், தமிழ்த் தேசியக் காவலர்கள் என்கிற போர்வையின், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அசிங்கங்களை அரங்கேற்றுவது, அயோக்கியத்தனங்களின் உச்சம். அதனை புலம்பெயர் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தாயகத்தில் இந்த ஊடகங்களினால் பெரிய தாக்கம் செலுத்த முடிவதில்லை. அதனால், மக்கள் தப்பித்துக் கொள்வார்கள். 

அந்த நிகழ்ச்சியின் காணொலி முதலாவது பின்னூட்டத்தில்...

0 commentaires :

Post a Comment