8/17/2020

கிழக்கு மாகாணத் தமிழர்கள் படிக்க வேண்டிய பாடம்

கிழக்கு மாகாணத் தமிழர்கள் படிக்க வேண்டிய பாடம்
*தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்  (தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு    தொடர்பு 0771900614 ; 0713837877 )
Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka ... நடந்து முடிந்துள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோள் பிரசுரத்தில் வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்க் கட்சிகளையெல்லாம் அதாவது 'சைக்கிள்' சின்னம், 'வீட்டுச்' சின்னம், 'உதயசூரியன்' சின்னம் மற்றும் 'மீன்' சின்னம் என அனைத்தையும் முற்றாகக் கிழக்குத் தமிழர்கள் நிராகரிக்க வேண்டுமென்றும் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் 'படகு'ச் சின்னத்திற்கும் 'கப்பல்'ச் சின்னத்திற்கும் மட்டுமே திடசங்கற்பத்துடன் வாக்களித்துக் கிழக்கில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டிருந்தோம். அம்பாறையில் 'கப்பல்'ச் சின்னத்தையும் மட்டக்களப்பில் 'படகு'ச் சின்னத்தையும் திருகோணமலையில் 'கப்பல்'ச் சின்னத்தையும் வெற்றியீட்டச் செய்வதன் மூலம் முழுக் கிழக்கு மாகாணத்தையும் காப்பாற்றுமாறும் கோரியிருந்தோம்.
கிழக்கின் அரசியல் களநிலையை நன்றாகத் தெரிந்திருந்தும் கூட தத்தம் கட்சிகளுக்குத் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான வாக்குகளைச் சேகரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுதான் வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாகக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) மற்றும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போன்ற கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டன.
இந்தப் பின்புலத்தில் தேர்தல் பெறுபேறுகளை உற்று நோக்குவோம். விடயஆய்விற்காக முதலில் மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் பெறுபேறுகளை எடுத்துக்கொள்வோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி (வீடு)-- 79 460 வாக்குகள்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (படகு) 67 692 வாக்குகள்.
சிறீலங்கா பொது ஜன பெரமுன (மொட்டு) 33 424 வாக்குகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி (உதயசூரியன்)  8 113 வாக்குகள்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (மீன்) 4 960 வாக்குகள்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்  (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) (சைக்கிள்)  1 203 வாக்குகள்.
இங்கே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக் குறைந்தபட்சம் 'சைக்கிள்' சின்னத்தையும் 'உதயசூரியன்' சின்னத்தையும் 'மீன்' சின்னத்தையும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்கள் நிராகரித்து இக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளைப் படகுச் சின்னத்திற்கு அளித்திருந்தால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மொத்தம் (67 692+ 8 113 + 4960 + 1 203= 80 765)  80 765 வாக்குகள் கிடைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற தகுதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குக் கிடைத்து அதன்மூலம் 'போனஸ்' ஆசனமும் கிடைத்து மொத்தம் நேரடியாக இரண்டு ஆசனங்கள் கிடைத்திருக்கும்.மட்டுமல்லாமல் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைத்து மொத்தம் அவர்களுக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்து இலங்கைப் பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பலம் ஓங்கியிருக்கும்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) நாடளாவிய  ரீதியில் (வடக்குக் கிழக்கு மாகாணங்களில்) பெற்ற மொத்த வாக்குகள் 67 766. இதில் அக்கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் விழுந்த 1 203 வாக்குகளும் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 283 வாக்குகளும் திருகோணமலை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 2 745 வாக்குகளும் அடங்கும். இந்த வாக்குகள் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோளின் படி 'சைக்கிள்'ச் சின்னத்திற்கு அளிக்கப்படாமல் முறையே மட்டக்களப்பு மாவட்டத்தில் 'படகு'ச் சின்னத்திற்கும் திகாமடுல்ல (அம்பாறை) மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 'கப்பல்'ச் சின்னத்திற்கும் அளிக்கப்பட்டிருக்குமாயின் தேசியப் பட்டியல் ஆசனமொன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குக் கிடைத்திருக்கும். 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நாடளாவிய ரீதியில் (மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்) பெற்ற மொத்த வாக்குகள்  67 692. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. அதாவது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆக 74 வாக்குகள் வித்தியாசத்தினால் தேசியப் பட்டியல் ஆசனத்தை இழந்துள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததைப்போல.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் (வடக்குக் கிழக்கு மாகாணங்களில்) பெற்ற மொத்த வாக்குகள் 67 766 இதில் குறைந்தபட்சம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அக் கட்சிக்கு விழுந்த 1 203 வாக்குகளாவது  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அளிக்கப்பட்டிருக்குமாயின் நாடளாவிய ரீதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மொத்தம்        (67 692 + 1203) 68 895 வாக்குகளும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு                ( 67 766 - 1203)  66 563 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும். இந்நிலையில் தேசியப் பட்டியல் ஆசனம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கே கிடைத்திருக்கும். கிழக்கு மாகாணத் தமிழர்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்கள் இத்தகைய அரசியல் தவறுகளை எதிர்காலத்தில் தேர்தல்களில் விடாது எச்சரிக்கையாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்ளவேண்டும்.
கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை திருகோணமலை மாவட்டத்தில் சைக்கிள் சின்னத்திற்கு விழுந்த 2 745 வாக்குகள் மட்டுமல்ல மீன் சின்னத்திற்கு விழுந்த 1 625 வாக்குகளும் வீணைச் சின்னத்திற்கு விழுந்த 3 725 வாக்குகளும் மெழுகுதிரிச் சின்னத்திற்கு விழுந்த 1 400 வாக்குகளும் அதேபோல் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் சைக்கிள் சின்னத்திற்கு விழுந்த 283 வாக்குகள் மட்டுமல்ல வீணைச் சின்னத்திற்கு விழுந்த 498 வாக்குகளும் கூட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகும். ஏனெனில் இச்சின்னங்கள் யாவும், கிழக்கின் கள நிலையை நன்கு தெரிந்திருந்தும் கூட மக்கள் நலன்களை புறந்தள்ளி விட்டுத் தங்கள் கட்சி நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்தி தனித்துப் போட்டியிட்ட வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளின் சின்னங்களாகும். எதிர்காலத்திலாவது கிழக்கில் இக்கட்சிகள் தனித்துப் போட்டியிட்டால் அக் கட்சிகளின் சின்னங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும். அதுவே அர்த்தமுள்ள அறிவுபூர்வமான செயற்பாடாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெறாமல் முவதும் தமிழ் வேட்பாளர்களையே உள்ளடக்கிய மொட்டுச் சின்னத்திற்கு விழுந்த 33 424 வாக்குகளினால் ஒரு தமிழ்ப் பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால் இவ்வாக்குகள் அதிர்ஷ்டவசமாக ஒருவகையில் வீணடிக்கப்படவில்லையெனத் திருப்தியடையலாம். இந்த நிலைமை எதிர்வரும் காலத்தில் எல்லாத் தேர்தல்களிலும் தொடர்ந்து இருக்கும் என்பதற்கில்லை. எனவே எதிர்காலத்தில் கிழக்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியற் கட்சிகளும் தேசிய கட்சிகளில் இணைந்து அரசியல் செய்யும் தனிநபர்களும் அரசியல் புரிந்துணர்வுடன் சேர்ந்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு போன்ற கூட்டு அரசியல் பொறிமுறை ஒன்றின் கீழ் ஒன்றிணைவதே ஆரோக்கியமானதாகும். அப்போதுதான் வடக்கைத் தளமாகக் கொண்டு போலித் தமிழ் தேசியம் பேசித் தத்தம் சுயநலத்திற்காகச் செயற்படுகின்ற தமிழரசுக்கட்சி உட்பட்ட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்களால் நிராகரிக்கச் செய்ய முடியும்.
எனவே திகாமடுல்ல (அம்பாறை), மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் சைக்கிள் சின்னத்திற்கு விழுந்த முறையே 283 , 1 203, 2 745 வாக்குகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்திற்கும் மீன் சின்னத்திற்கும் விழுந்த முறையே        8 113, 4 960 வாக்குகளும் திகாமடுல்ல (அம்பாறை) மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் வீணை சின்னத்திற்கு விழுந்த முறையே 498, 3 775 வாக்குகளும் திருகோணமலை மாவட்டத்தில் மீன் சின்னத்திற்கும் மெழுகுதிரிச் சின்னத்திற்கும் விழுந்த முறையே 1 625, 1 400 வாக்குகளும் வீணடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் மொத்தம் (283+1 203 + 2745 + 8113 +4960+ 498 +3775+1625+1400=24602) 24 602 தமிழர்களுடைய வாக்குகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தை எடுத்து நோக்குவோம். அங்கு 'அகில இலங்கை தமிழர் மகாசபை'க் கட்சியின் 'கப்பல்'ச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் பிரதானமாக இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டத்திற்குப் போட்டியிட வந்தது ஏன் என்பதும் அவர் துரோகி என்பதுமே அந்த இரு குற்றச்சாட்டுக்களாகும். ஆனால் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இந்த இரு குற்றச்சாட்டுக்களையும் நம்பாது அவற்றை உதாசீனம் செய்து 29 379 வாக்குகளைக் 'கப்பல்'ச் சின்னத்திற்கு வழங்கியிருந்தனர். இது ஒரு சாதனையாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ( தமிழரசுக் கட்சிக்கு) அதாவது 'வீட்டு'ச் சின்னத்திற்கு  25 255 வாக்குகள் அளிக்கப்பட்டன. கருணா அம்மான் தமிழரசுக் கட்சியை 4 124 வாக்குகளால் தோற்கடித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அம்பாரை மாவட்டத் தமிழர்களின் ஒரே ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத் தமிழர்கள் வாழுகின்ற சமூக பொருளாதார அரசியல் சூழலை நன்கு புரிந்திருந்தும் கூட வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்த 25 255 தமிழர்களும் தங்கள் தலைகளிலேயே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டது மட்டுமல்ல முழு அம்பாறை மாவட்டத் தமிழர்களின் தலைகளின் மீதும் மண்ணள்ளிக் கொட்டியுள்ளார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.  25 255 தமிழ் வாக்குகள் வீணடிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத் தமிழர் பிரதிநிதித்துவம் பறி போனமைக்குத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பாகும். இதற்கான பிராயச்சித்தம் என்னவென்பது இன்று கேள்விக் குறியாக உள்ளது. வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்த அநேக தமிழர்கள் இன்று அதனை எண்ணி வேதனைப் படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேவேளை அம்பாறை மாவட்டத் தமிழர்களிடம் இருந்து பிரதானமாக மொட்டுச் சின்னம் உட்பட ஏனைய கட்சிகளுக்கு அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் சுமார் 10 000 வாக்குகளும் கூட வீணடிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகளாவது கப்பல்ச் சின்னத்திற்கு அளிக்கப்பட்டிருக்குமானால் அம்பாரை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கமாட்டாது.
எனவே இவற்றையொரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத் தேர்தல்களில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமல்ல வடக்கைத் தளமாகக் கொண்ட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் முற்றாக நிராகரிக்கும் முடிவினை இப்போதிருந்தே எடுத்துக்கொள்ளவேண்டும். அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு இது ஒன்றே அறிவுபூர்வமான அரசியல் பாதையாகும். எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைத் தமிழர்கள் தம்வசப்படுத்த வேண்டுமாயின் முழுக் கிழக்கு மாகாணத் தமிழர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) உள்ளிட்ட வடக்கைத் தளமாகக் கொண்ட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்கு மண்ணில் இருந்து முற்றாக வாக்குப் பலத்தினால் வெளியேற்றியாக வேண்டும். அந்தச் செயன்முறைக்கு முதற்படியாக கிழக்கைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளும் ஓர் அரசியல் கூட்டமைப்பாக தம்முள் ஒன்றிணைய வேண்டும். அதற்கான பொறிமுறையைத் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் என்பது மக்களுக்கானதே தவிர அது தனி நபர்களுக்கானதோ அல்லது தனிப்பட்ட ஒரு கட்சிக்கானதோ அல்ல. எனவே கிழக்கில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இணைவது ஒன்றேதான் கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒன்று திரண்ட அரசியல் சக்தியாக மேற்கிளம்புவதற்கான தகுந்த அரசியல் பொறிமுறையாகும்.
மேலும், நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பெறுபேறுகளிலிருந்து கிழக்கு மாகாணத் தமிழர்களிடையே தமிழ் அரசியற் கட்சித் தலைவர்களும் மக்களும் என இரு தரப்பினரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கிழக்கில் செயற்படும் சகல தமிழ் அரசியற் தரப்பினரையும் அதாவது பிள்ளையான்,  கருணா அம்மான், வியாழேந்திரன், அருண் தம்பிமுத்து, கணேசமூர்த்தி இவர்களுடன் சட்டத்தரணி சிவநாதன் தலைமையிலான கிழக்கு தமிழர் ஒன்றியத்தினரையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைக்கவே அகில இலங்கை தமிழர் மகாசபையையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியையும் பங்காளிக் கட்சிகளாக கொண்டு உருவான அரசியல் கூட்டணியான (Political Alliance) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பகீரதப் பிரயத்தனம் செய்தது. ஆனால் அம்முயற்சி முழுமையாக வெற்றியளிக்கவில்லை. இருப்பினும் அம்முயற்சி மட்டக்களப்பு மாவட்டத்திலே பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து படகுச் சின்னத்திலும் திகாமடுல்ல (அம்பாறை) மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தின் கீழ் கருணாஅம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை உள்வாங்கியும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு போட்டியிடுவதைச் சாத்தியமாக்கிற்று. இது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் முயற்சிக்குக் கிடைத்த ஒரு கட்ட வெற்றியாகும்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக உரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளாததும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்துகொண்டே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கிழக்கில் தனித்துப் போட்டியிட்டமையும் வியாழேந்திரன், அருண் தம்பிமுத்து, கணேச மூர்த்தி ஆகியோர் தனி வழிகளை நாடியமையும் கிழக்குத் தமிழர் ஒன்றியப் பிரதிநிதிகள் அருண் தம்பிமுத்து தலைமையிலான உதயசூரியன் சின்னத்தில் இணைந்து கொண்டமையும், கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல்ச் சின்னத்தில் திகாமடுல்லை (அம்பாறை) மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் போட்டியிட்ட சமகாலத்தில் அதற்கு முரணான வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் சுயேச்சை குழு ஒன்றை நிறுத்தியமையும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களைப் பொறுத்தவரை துரதிருஷ்டவசமான எதிர்மறையான அரசியல் நிகழ்வுகளாகும்.
எது எப்படி இருப்பினும் தேர்தல் பேறுபேறுகள் தலைவர்களினதும் மக்களினதும் என இரு தரப்பினரினதும் சரி பிழைகளைச் சுட்டிக்காட்டியள்ளன. எனவே இதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மேற்குறிப்பிட்ட கட்சிகளும் தனிநபர்களும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தின் கீழ் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட்டால் மட்டுமே கிழக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரத்தைத் தமிழர்கள் தம் வசப்படுத்த முடியும். இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் வகிபாகத்தைக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தொடர்ந்து மேற்கொள்ளும்.
வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் எதுவெனினும் கிழக்கில் போட்டியிட விரும்பினால் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இணைந்து போட்டியிட வேண்டுமே தவிர தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்து வீணாக்கக்கூடாது என்பதே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மக்கள் நலன் சார்ந்த இந்த அறிவுபூர்வமான தனித்துவமான அரசியல் அணுகுமுறையை  அல்லது அரசியல் உபாயத்தை வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் பிரதேசவாதம் எனத் தவறாகவே கற்பிதம் செய்கின்றன. இத் தவறான புரிதலை தவிர்த்துக் கொண்டு வடக்கைத் தளமாக கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி வழிவிட வேண்டும்.
வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி) உட்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளிடமும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு விநயமாக  விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.
"வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக நிர்வகிக்கப்படும் இன்றைய யதார்த்தச் சூழ்நிலையில் வடக்கில் எறிகிற பொல்லை நீங்கள் கையில் எடுங்கள். கிழக்கில் நாங்கள் எறிகிற பொல்லை நாங்களே கையிலெடுக்க வழிவிடுங்கள். அப்போது இருவருடைய கைகளிலும் எறிகிற பொல்லுகள் இருக்கும். பின்னர் தேவையைப் பொறுத்து இருவரும் சேர்ந்து எறிந்துகொள்ளலாம்"
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் கூற விழைவது என்னவெனில், அரசியல் என்பது மக்களுக்கானது. அது தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது தனிப்பட்ட கட்சிக்கோ ஆனது அல்ல என்பதைத்தான். எனவே தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் தனிநபர் நலன்களுக்கு அப்பால் கட்சி நலன்களுக்கு அப்பால் நின்று சிந்தித்து ஒட்டுமொத்தக் கிழக்குமாகாணத் தமிழர்களினதும் நலன்கள் சார்ந்து முடிவுகளை எடுங்கள். இதற்காகக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உங்கள் எல்லோருடனும் எப்போதும் கைகோர்க்கக் காத்திருக்கிறது. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கதவுகள் எப்போதும் எல்லோருக்கும் அகலத் திறந்தேயுள்ளன.

0 commentaires :

Post a Comment