11/15/2020

பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் கைது தொடர்பான ஊடக அறிக்கை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

 பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் கைது தொடர்பான ஊடக அறிக்கை- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி Tamil makkal viduthalai pulikal தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - Home |  Facebook

 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் கடந்த 12.11.2020 அன்று கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த குற்றத்தடுப்புப் பிரிவின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பான வழக்கொன்றில் சாட்சியை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எமது கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 இக்கொலை தொடர்பாக ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களும் மற்றும் அவரது சகோதரரும் இன்னும் சிலரும் 2015ஆம் ஆண்டு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 இவ்வழக்கில் தொடர்ச்சியாக அதன் ஒரு சாட்சியாளரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட சாட்சியங்களை பாதுகாக்கும் அதிகார சபையின் ஊடாக இந்த கைது நடவடிக்கை சட்டமா அதிபரின் பணிப்பின் பெயரில் இடம்பெற்றுள்ளது.

 இக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத நிலையிலும் இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தற்போது இவ்வழக்கின் பிரதான சாட்சியாளர் ஒருவரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டமூலத்தின் ஊடாக நிறுவப்பட்ட சாட்சியங்களை பாதுகாக்கும் அதிகார சபையின் ஊடாக சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றது. உண்மையிலேயே இக்குற்றச்சாட்டாது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதும் தனிப்பட்ட பழிவாங்கல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதுமாகும்  என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 குறிப்பிட்ட முறைப்பாட்டாளர் ஆரையம்பதி பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவரது இரண்டு பிள்ளைகள் தற்போது சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி வருகின்றனர் குறித்த சாட்சியாளரும் சுவிஸ்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காகவே இம்முறைபாட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. இம்முறைப்பாடானது சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் அளவில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இம்முறைப்பாட்டுக்கு எதிராக அப்போதே எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார். எவ்வித தகுந்த காரணமும் இன்றி திட்டமிட்ட அடிப்படையில் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக தன்மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை குறித்த சாட்சியாளர் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகார சபையில் முன்வைத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

 நாங்கள் எப்போதும் சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். கட்சியின் தலைவர் அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வட கிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற போதிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியாக இருக்கின்ற போதிலும் எவ்வித அரசியல் நலன்களை பயன்படுத்தாமல் சட்டத்தின் ஊடாகவும் நீதிமன்றத்தின் ஊடாகவும் அவரின் விடுதலை பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் தான் இப்போது எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கைதும் இடம்பெற்றிருக்கின்றது.

 இதனடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது கட்சியின் பொதுச் செயலாளரை சட்டத்தின் ஊடாக நீதிமன்றத்தின் ஊடாகவும் விரைவில் வெளிக் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எமது கட்சி மேற்கொண்டுள்ளது. 

 எமது கட்சியின் வளர்ச்சியையும் எமது கட்சியின் மக்கள் ஆதரவினையும் கண்டு பொறுக்க முடியாத சக்திகள் இதனை கொண்டாடுகின்ற போதிலும் இது எமது வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையுமே தவிர மாறாக நாங்கள் இதைக்கண்டு அஞ்சவோ அல்லது தளரவோ மாட்டோம் என்பதனை இந்த கடந்த கால வரலாறு நிருபித்துள்ளது.

 எம்மை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம் மக்களின் பேராதரவுடன் பெரும் விருட்சமாக நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோமே தவிர கானல் நீரில் கரைந்து போன பொருட்களாக நாங்கள் மாறவில்லை. எனவே முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடனும் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெற வேண்டும் என்ற காரணத்திற்காகவும் எமது கட்சியின் பொதுச் செயலாளர் மீது புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 எவ்வித ஆதாரமும் இல்லாமல் எவ்வித அடிப்படை காரணமும் இல்லாமல் ஒரு முறைப்பாடு அளிக்கப்பட்டு இருக்கின்றது என்ற காரணத்திற்காக மாத்திரம் ஒரு பாரதூரமான சட்டமூலத்தை பயன்படுத்தி அந்த சட்டப் பிரிவின் ஊடாக உடனடியாக பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி கட்சி செயலாளரை சிறைப்படுத்தி இருப்பதானது இந்த அரசியல் உள்நோக்கத்தின்  பின்புலத்தில் யாழ் மேலாதிக்க வாதிகளின் கரங்கள் இறுக்கமாக இருக்கின்றன என்ற ஐயத்தினை தோற்றுவித்துள்ளது.

 எது எவ்வாறு இருப்பினும் நீதிதேவதை எம்மோடு இருப்பதன் காரணமாக எமது கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிராக இந்த போலியாக புனைக்கப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து சட்டத்தின் ஊடாகவும் நீதிமன்றத்தின் ஊடாகவும் மிக விரைவில் வெளிக்கொணரும் நடவடிக்கையினை எமது கட்சி மேற்கொண்டுள்ளது எனவே இதன் ஊடாக எம்மை அழிக்கலாம், தடுத்து நிறுத்தலாம் என்று நினைப்பவர்களுக்கு இதனை ஒரு பாடமாக கொண்டு நாம் மீண்டும் ஒரு வீறுகொண்ட சக்தியாக மீண்டெழுவோம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

-ஊடகப்பிரிவு-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 
(ஒற்றுமை உரிமை தனித்துவம்)

0 commentaires :

Post a Comment