1/23/2021

ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையும் கட்டிக்காத்த தோழர் ஜெமினி- ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

தோழர் 'ஜெமினி' காலமானார் என்கின்ற துயர்மிகு செய்தி எம் தோழமைகள்  அனைவரையும் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளது . ஜெமினி என்றதுமே அவரது 'தேனீ' இணையத்தளமே பசுமரத்தாணியாய் எம் கண்முன்னே நிற்கின்றது. 


'தேனீ' என்பது  பத்தோடு பதினொன்றான இணையத்தளமல்ல. பாசிசத்தின் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட ஜெமினி என்னும் தோழனின் நெஞ்சுரத்தில் பிரதிபலிப்பு ஆகும். ஒரு பெரும் போர் சூழலில் பரபட்ஷமற்ற ஊடக தர்மத்தை  பேணி பாதுகாப்பதில் தேனீ இணையத்தளம் வகித்த பாத்திரம் மிகமிக காத்திரமானது.

விடுதலையின் பெயரில் புறந்தள்ளப்பட்ட சாமானிய மக்களின் குரலாக தேனீ ஒலித்தது. தேனீ இணையத்தளத்தின் செயற்பாடுகளில் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையும் கட்டிக்காக்க முழுமையாக தோழர் ஜெமினி ஒருபோதும் பின்நிற்கவில்லை. மாற்று கருத்துக்களுக்காக குரல்கொடுப்பதென்பது தற்கொலைக்கு சமனான சூழலொன்றில் தோழர் ஜெமினியின் பங்களிப்பானது மதிக்கத்தக்கது மட்டுமன்றி மகத்தானதுமாகும்.

தமிழ் சூழல் என்பதே புலி-பாசிசமாய் மாறி நின்ற அந்த இருள் நிறைந்த காலங்களில்  அச்சமும் கொலை பயமுறுத்தல்களும் அவரை எதுவுமே செய்துவிடவில்லை. கிழக்கு போராளிகளின் ஜனநாயக மீள் வரவின் போது அவர்களின்  நியாயங்களை  வெளிக்கொணரவும் கிழக்கில் ஒரு ஜனநாயக மீட்சியையும்  இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்தவும் 
எமது முன்னணி வெளியிட்டு வந்த அத்தனை அறிக்கைகளையும் பிரசுரிப்பதில் தோழர் ஜெமினி காட்டிய பன்மைத்துவத்தை மதிக்கும் பக்குவத்துக்கு நாம் என்று தலைவணங்குகின்றோம். தோழர் ஜெமினிக்கு எமது  இதய அஞ்சலிகள் உரித்தாகட்டும். 

தோழர் ஜெமினியின் ஈடு செய்யமுடியாத  இழப்பில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் மற்றும் தோழமை சக்திகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 


ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி 
kilakku@hotmail.com
0 commentaires :

Post a Comment