1/23/2021

ஆசிரிய நியமனங்களில் பின்தங்கிய பிரதேசங்களுக்கே முன்னுரிமை - கிழக்கிலங்கை உயர்க்கல்வி மாணவர் ஒன்றியம்

கடந்த ஆண்டு நாடெங்கிலும் காணப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு 'பயிலுனர்கள்' என்கின்ற பதவிநிலையூடாக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில்  பதவிகளைப்பெற்றுக்கொண்ட 1934 பேர் மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இந்த பட்டதாரி பயிலுனர்களுக்கு குறித்ததொரு  ஒரு பதவிநிலையினை சார்ந்த நியமனங்களை  வழங்குவது பற்றிய  இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படாதிருந்தது. இவ்வாறாக  இருந்த இழுபறி   நிலைக்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இணை தலைவருமான கெளரவ.சந்திரகாந்தன் அவர்களது தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி பயிலுனர்களை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன. இத்தீர்மானத்தின் ஊடாக பயிலுனர்களாக இருந்தவர்களுக்கு நிரந்தர பதவிநிலையொன்று  வழங்கப்பட்டிருப்பது மட்டுமன்றி அதேவேளை  கல்வித்துறைசார்ந்து காணப்படுகின்ற ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்திசெய்யும் வண்ணம் சமயோசிதமாக  இவ்விடயமானது கையாளப்பட்டுள்ளது.


இது பற்றிய தமது அறிக்கையில் கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தின் ஆசிரிய நியமனங்களில் பின்தங்கிய பிரதேசங்களுக்கே  முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனக்கோரிக்கை விட்டுள்ளனர். 

மேலும் ஒன்றியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
இதனடிப்படையில் பயிலுனர்கள் பதவிநிலையிலிருந்த 1934 பேரில் 1534 பேர் ஆசிரியர்களாக பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களில் 1232 பட்டதாரிகள் ஆசிரிய பயிலுனர்களாக தேர்தெடுக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டம் முழுக்க நீண்டகாலமாக காணப்பட்டுவந்த ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானத்தினை நாம் வரவேற்பதோடு பட்டதாரி  பயிலுனர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அத்தோடு இந்நியமனங்களாவன   ஐந்து கல்வி வலையங்களுக்குமுரிய தேவைகளினடிப்படையில் பிரிந்து வழங்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது. இவ்வரிய செயலானது  நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறையில் சிக்கித்தவித்து கிடந்த  பின்தங்கிய படுவான்கரை,மற்றும் வாகரை பிரதேச மாணவர்களுக்கு கிடைத்துள்ள பெரும்  வரப்பிரசாதமாகும் என நாம் கருதுகின்றோம்.

ஆனால் எமது இந்த இளம் ஆசிரியர்களில் பலர் நியமனங்களை  பெற்றுக்கொள்ளமுன்பே வசதிவாய்ப்புகள் அதிகமாக உள்ள பாடசாலைகளையும் தத்தமது சொந்த கிராமங்களுக்கு அருகேயிருக்கக்கூடிய பாடசாலைகளையும் குறிவைத்து இடமாற்றங்களுக்கு முயற்சிப்பதாக வேதனையான தகவல்கள் வெளிவருகின்றன.

இவ்விடயத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அதிகாரிகளும் மாணவர்களின் நலன்களில் நின்று  இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

எமது இளம் ஆசிரியர்களும் 'ஆசிரியபதவி' என்பதனை  மாதாந்த சம்பளத்துக்கான உத்தியோகமாக  மட்டும் கருதாது மக்கள் நலன் சார்ந்த மகத்தான பணி  செய்யும் வாய்ப்பாகவும்  கருதவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று கல்விகற்பிக்க எமது மாவட்டத்தை சேர்ந்தவர்களாகிய  நாமே முன்வராவிட்டால் எமது மாவட்டம் எப்படி முன்னேற முடியும்? காங்சிரங்குடாவுக்கும் காயங்கேணிக்கும் கற்பிக்க  ஆசிரியர்களை வேறு மாவட்டத்திலிருந்தா கொண்டுவரமுடியும்? என்பதை தயவுடன் சீர்தூக்கி பார்க்குமாறு வேண்டுகின்றோம் .

ஒரு காலத்தில்  யாழ்ப்பாணத்திலிருந்து எமது மாவட்டத்துக்கு மட்டுமன்றி இலங்கையின் மூலை முடுக்குகளெங்கும்  சென்று கல்வி கற்பித்த ஆசிரியர்களை எண்ணிப்பாருங்கள். அவர்களின் தியாகங்கள் எத்தகையது? சுமார் 70-80ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து மக்களின் பார்வையில் 'பில்லி சூனியம் நிறைந்ததாக சொல்லப்பட்ட  மட்டக்களப்பு' போன்ற இடங்களுக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு  வந்து ஆசிரியர்களாக பணியாற்ற எத்துணை மனோதிடமும் சேவை மனப்பாங்கும் இருந்திருக்கவேண்டும்? 

அவற்றில் பத்தில் ஒருபங்கு கூட இன்றைய இளைஞர்களிடத்தில் இல்லாவிட்டால் எமது சமூகம் எப்படி முன்னேற முடியும்? என்று சிந்திக்க வேண்டுகின்றோம்.

யுத்தகாலத்தில் கூட பல பத்து கிலோமீற்றர்  தூரங்களிலிருந்து எத்தனையோ இராணுவ சோதனைச்சாவடிகளையும் குண்டு வெடிப்புகளையும் 
கடந்து வெறும்  ஒற்றைச் சயிக்கிள்களை மட்டுமே நம்பி வந்து நமக்கு கற்பித்து சென்ற ஆசிரியர்களை நாம் மறந்துவிட முடியுமா? அவர்களின் தியாகங்களும் சேவை மனப்பாங்கும் இல்லாவிட்டால் நாமெல்லாம் இன்று பட்டதாரிகளாக வந்திருக்கமுடியுமா? 

எனவேதான்  வாழ்க்கையில் முதலாவது உத்தியோகம் கிடைத்துள்ள இளம்வயதில் நான்கு  ஊர்கள் கடந்து மக்கள் பணிசெய்ய  தயங்குகின்ற எமது உறவுகள்  தங்கள் மனநிலைகளை  மாற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். பிற்படுத்தப்ப்பட்ட கிராமங்களில் வாழும் எமது எதிர்கால சந்ததியினருக்காக  ஒரு சில தியாகங்களை செய்வதற்கு திடசங்கற்பம் பூணுமாறு உங்கள் ஒவ்வொருவரையும் வினயமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். 

அத்தோடு பிறந்துள்ள புதிய வருடத்தில்  புதியதாய் ஆசிரியப்பணிகளில் இணைந்துள்ள அனைவருக்கும், உங்கள் பணி  சிறக்கவும் அதனுடாக எமது மாணவ மணிகளின் வாழ்வில் ஒளி பிறக்கவும் வேண்டுமென்று எமது கிழக்கிலங்கை உயர்க்கல்வி மாணவர் ஒன்றியத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


0 commentaires :

Post a Comment