2/10/2021

கொரோனா தடுப்பூசி இலங்கையில் உற்பத்தி செய்வது குறித்து ஆராய்வு

கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் எதிரணி விமர்சித்தாலும் அந்த செயற்பாடு வெற்றிகரமாக இடம்பெறுகிறது.அந்த மருந்தையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்வது குறித்து இராஜதந்திர பேச்சுக்கள் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி இடம்பெற்று வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

பல்வேறு வழிகளில் எதிர்க்கட்சியினரால் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் எமது நாட்டில் மட்டுமன்றி பல நாடுகளிலும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குகின்ற சவால்கள் உள்ளன. கொவிட் கட்டுப்பாட்டிலேயே அனைத்து நாடுகளினதும் பொருளாதாரமும் தங்கியுள்ளது. இதுவரை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது. நாளையாகும்போது முதலாவது சுற்றில் எமக்கு கிடைத்த தடுப்பூசிகள் அனைத்தையும் வழங்கி நிறைவுக்கு கொண்டுவர முடியும்.

இன்னும் இரண்டு மாதங்களில் ஏற்கனவே பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். சீனாவிலிருந்து இந்த வார இறுதிக்குள் ஒருதொகை தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அதேபோல சுகாதார அமைச்சு, 18 மில்லியன் எஸ்ரா செனிகா தடுப்பூசிகள் இறக்குமதி செய்துள்ளது. அதற்கமைய சுமார் 10 மில்லியன் பேருக்கு மே மாதத்திற்குள் இந்த தடுப்பூசிகளை வழங்கி நிறைவுபடுத்தலாம். 4000 நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் 22.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட எமது நாட்டில் 45 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிவிடமுடியும். அதேபோல ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 100 வீதம் வெற்றியளித்திருப்பதாகவே அறியமுடிகிறது. ஆகவே அந்த மருந்தையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும் அளவுக்கான இராஜதந்திர பேச்சுக்கள் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி இடம்பெற்று வருகின்றன.


0 commentaires :

Post a Comment