2/19/2021

‘சீனோப்பியா’ வியாதிக்கான காரணங்கள் - தோழர் மணியம் சண்முகம்


இலங்கையின் வட பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் மின்நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து, தமிழ் அரசியல்வாதிகள் தமது வேற்றுமைகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, ‘இதனால் இந்தியாவுக்கு ஆபத்து!’ என சீனாவுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் வசைபாடத் தொடங்கியிருக்கிறார்கள். (ஆனால் இதே அரசியல்வாதிகள்தான் புலிகள் இந்தியாவுடன் யுத்தம் செய்தபோது விழுந்து கட்டிக்கொண்டு அதையும் ஆதரித்தவர்கள். அப்பொழுது இந்த இந்தியப் பாசம் எங்கே ஓடி ஒளித்ததோ தெரியவில்லை)
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. அது இறைமையுள்ள ஒரு நாடு. தீவுகளில் மின்நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை அரசு சீனாவுக்கு இரகசியமாகக் கொடுத்துவிடவில்லை என்றும், சர்வதேச நியதிகளின்படி பகிரங்கமாக கேள்விப்பத்திரம் வெளியிட்டு அதன் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் அரசாங்கம் தெளிவுபடுத்திய பின்பும், சீனா இவற்றை நிறுவுவதால் இந்தியாவுக்கு ஆபத்து என இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் புலம்பிய வண்ணம் உள்ளனர். அப்படியானால் இலங்கை கேள்விப்பத்திரம் வெளியிட்டபோது சீனாவை முந்திக்கொண்டு இந்தியா அந்த உரிமத்தைப் பெற்றிருக்கலாம்தானே? ஏன் பெற முடியவில்லை? யார் தடுத்தார்கள்?
இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினருக்கு இந்த சீன விரோதக் காய்ச்சல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 1956இல் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் இலங்கையின் தேசிய சுதந்திரத்தையும் இறைமையையும் சுயாதிபத்தியத்தையும் பாதுகாப்பதறகாக சில நடவடிக்கைகளை எடுத்தார். அதில் ஒன்று கட்டுநாயக்காவிலும் திரிகோணமலையிலும் இருந்த பிரித்தானிய இராணுவத் தளங்களை வெளியேற்றியது. அந்த நேரத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் பிரித்தானியா தனது தளங்களை வெளியேற்ற வேண்டாம் எனக்கோரி எலிசபெத் மகாராணிக்கு தந்தி அனுப்பினார்! என்னே தேசபக்தி!! (உண்மையான இந்தியக் காந்நி “வெள்ளையனே வெளியேறு!” எனக் கூற, இந்த போலி ஈழத்துக் காந்தி “வெள்ளையனே வெளியேறாதே!” என்று கூறியிருக்கிறார்.)
அன்றிலிருந்து திரிகோணமலை துறைமுகத்தை பண்டாரநாயக்காக்களின் அரசுகள் சீனாவுக்கு கொடுக்கப்போகின்றன என தமிழரசுக் கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இன்றுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, திரிகோணமலை – சீனன்குடாவில் உள்ள எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமின்றி, தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கிய கடந்த ‘நல்லாட்சி’ அரசு திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்காவுக்கும் சில வசதிகளைச் செய்துகொடுக்க முன்வந்தது. அதைப்பற்றியெல்லாம் இவர்கள் ஒருபோதும் வாய்திறக்கமாட்டார்கள்.
1962இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை யுத்தம் நடைபெற்ற பொழுது, இரு நாடுகளையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அப்போதைய இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க ஈடுபட்டார். ஆனால் தமிழரசுக் கட்சியினர் ஒருதலைப்பட்சமாக சீனாதான் இந்தியாவை ஆக்கிரமித்துவிட்டது எனப் பிரச்சாரம் செய்துகாண்டு, கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யப்போய் கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்களினால் விரட்டப்பட்டு ஓடி வந்தனர்.
1970களில் சீன அரசாங்கம் கொழும்பில் பண்டாரநாயக்கவின் பெயரில் ஒரு சர்வதேச மாநாட்டு நினைவு மண்டபத்தைக் கட்டிக்கொடுத்தபோது, அதைக் கட்ட வந்த சீனர்கள் கொண்டு வந்து கொடுத்த ஆயுதங்களைப் பயன்படுததியே ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஆயுதக் கிளர்ச்சி செய்ததாகப் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.
அம்பந்தோட்டையில் துறைமுகம் ஒன்றையும், மத்தளவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றையும் சீனா அமைத்துக் கொடுத்தபோது, அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என ஓலமிட்டனர். (இருந்தும் சீனர்களை உளவு பார்ப்பதற்காக இந்தியா அம்பாந்தோட்டையில் துணைத் தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது) அதேபோல, கொழும்பில் மிக உயரமான ‘தாமரைக் கோபுரம்’ சீனாவால் நிர்மாணிக்கட்டபோதும், அது உயரத்தில் இருந்து கொண்டு இந்தியாவை உளவு பார்ப்பதற்குத்தான் என்றனர். கொழும்பு துறைமுக நகரைச் சீனா நிர்மாணித்தபோதும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையப் பொறுப்பை இந்தியாவுக்கும் யப்பானுக்கும் வழங்குவதற்கு முன்னைய இலங்கை அரசு ஒப்பந்தம் செய்திருந்தபோதும், துறைமுகத் தொழிலாளர்கள் முழுப்பேரினதும், மக்களினதும் ஏகோபித்த எதிர்ப்பால் அதை இரத்துச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு உருவாகியது. அதையும் அரசாங்கத்தில் இந்திய விரோதச் செயல் என்றனர். அப்படியானால் இலங்கை மக்கள் விருப்பு வெறுப்பு ஏதுமின்றி கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதா இவர்களது எண்ணம்? இருந்தும் அரசாங்கம் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.
அதேநேரத்தில், இலங்கையின் வடக்குக் கடலில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடிப்பது பற்றியோ, அதனால் வட பகுதி தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவது பற்றியோ இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் அங்குவந்து மீன்பிடித்தால் (அதுவும் தவறு என்றபோதும்) கூப்பாடு போடுவார்கள்.
அதேபோல, அமெரிக்காவுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ இலங்கையின் வளங்களைத் தாரைவார்த்தால், அதுபற்றி ஒன்றும் பேசமாட்டார்கள், உள்ளுர மகிழ்ச்சி அடைவார்கள். சீன எதிர்ப்பு பேசும் இவர்கள், அமெரிக்கா அவுஸ்திரேலியாவையும் யப்பானையும் சேர்த்துக்கொண்டு ‘இந்தோ – பசுபிக் உடன்படிக்கை’ என்ற பெயரில் சீனாவுக்கு எதிராக அமைத்துள்ள இராணுவக்கூட்டில் இந்தியாவும் இணைந்திருப்பதில் எல்லாம் இவர்களுக்கு அக்கறை கிடையாது.
எதற்கெடுத்தாலும் சீன விரோதக் கூச்சல் கிளப்புவது இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான தொழிலாகப் போய்விட்டது. அவர்களின் இந்த ‘சீனோப்பியா’ வியாதிக்குக் காரணம், அவர்கள் மத்தியில் நீண்டகாலமாக புரையோடிப் போய்விட்ட சோசலிச எதிர்ப்புணர்வும், ‘இந்தியா எங்கள் தாய்நாடு’ என்ற உணர்வும்தான்.

நன்றி முகநூல் *தோழர் மணியம் சண்முகம்

0 commentaires :

Post a Comment