7/20/2021

ஹிஷாலினியின் கொலை


ஹிஷாலினியைச் சீரழித்து கொலை செய்தது இந்தச் சமூகக் கட்டமைப்பு.....

ரிசாட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதுடன், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகியுள்ளார் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பாக சில இனவாத ரீதியான கருத்துக்களையும், பிரதேசம் சார்ந்த போராட்டங்களையும், இந்த விவகாரத்தில் அரசியல் இலாபம் பெற முனையும் கூட்டங்களையும், அதேநேரம் இதுதொடர்பில் சரியான ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்திருந்த சமூக ஆர்வலர்களையும், சமூக நலன்சார் அமைப்புகளையும் காணக்கிடைத்தது. 

சிறுமியின் மரணம் குறித்து மேலோட்டமாக ஆராய்வதாலும் ஆவேசப்படுவதாலும் மாத்திரம் இதுபோன்ற கொடிய சம்பவங்களை தடுத்து நிறுத்திவிட இயலாது என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்யவேண்டியுள்ளது. 

குறித்த சிறுமி தனது கல்வியை 13 வயதில் இடைநிறுத்தியுள்ளதுடன், குடும்ப வறுமையின் காரணத்தால் அவர் வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இதுபோன்று பல சிறுமியர், சிறுவர்கள் கல்வியை இடைநிறுத்திவிட்டு நகர்புறங்களிற்கு தொழில் தேடிச் செல்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 

பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும், பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு தொழில் பேட்டைகளை நோக்கி அணிவகுப்பது அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமையில், மந்த கதியில் இயங்கும் கல்வி நிறுவகங்களிடம் முறையான கொள்கைத் திட்டம் இல்லாத காரணத்தினால் இந்நிலைமை எதிர்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 

தற்போது இலவசக்கல்வியை பாடையிலேற்றி தனியார் மயப்படுத்துவதற்கும் மிலிட்டரிமயமாக்குவதற்கும் செயற்படுகின்ற இன்றைய கோட்டாபய அரசாங்கத்தினதும், இதற்கான அத்திவாரத்தையிட்ட கடந்த ஆட்சியாளர்களினதும் ஆட்சியிலும் கல்வி என்பது வியாபார பண்டமாக்கப்பட்டுள்ளது. 

அதனால், இலவசக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குக் கூட இந்த ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டுவதுடன், மக்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டத்தை காட்டும் வகையில் சில மேலோட்டமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் நகர்ப்புற பாடசாலை கல்விக்கும், தோட்டப்புற பாடசாலை கல்விக்கும் இடையில் நிரம்பவே வித்தியாசங்கள் உள்ளன. ஒருபுறம், நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருப்பதுடன், தோட்டப்புற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னொருபுறம், பல்தேசிய கம்பனிகளுக்கும் பண முதலைகளுக்கும் தாரைவார்க்கப்பட்ட காணிகளில் பாரிய ஹோட்டல்களும், கிளப்புகளும் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதுடன், தோட்டப்புற பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டட வசதிகள் இல்லாத நிலை காணப்படுகிறது. 

தோட்டப்புறங்களில் முறையாக கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதுடன், வசதிகள் அற்ற பாடசாலைகள் ஏராளம் உள்ளன. தோல்விகண்ட மற்றும் தோட்டப்புற மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணை நின்றவர்களுமே இதற்கு முழு பொறுப்பாளிகளாவர். இவர்களின் பாராமுகத்தினால் ஹிஷாலினி போன்ற சிறுவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி விட்டு தொழிலுக்குச் செல்கின்றனர். 

 இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு பிரதான விடயம் இம்மக்களது பொருளாதார நிலைமையாகும். பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட, பாதிப்படைந்த சமூகம் பெருந்தோட்ட சமூகமாகும். இதுவரையிலும் வாழ்வாதாரத்திற்கான ஊதியத்தை வென்றெடுப்பதற்கு இம்மக்கள் போராடி வருகின்ற நிலையில், இவர்களை முன்னிறுத்தி அரசியலை மேற்கொள்ளும் மலையக அரசியல்வாதிகள் இம்மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தும் ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசியும் வருகின்றனர். இதனால் உறுதியான பொருளாதாரத்தை வென்றெடுக்க முடியாத காரணத்தினால் தோட்டப்புறங்களில் மற்றைய பிரதேசங்களைக் காட்டிலும் நவீன கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. பொருளாதார பின்னடைவு இம்மக்களை எல்லாத் துறைகளிலும் மேலெழும்பவிடாது எட்டி உதைத்துக் கீழே தள்ளிக்கொண்டிருக்கிறது. 

அரசாங்கத்தின் வர்த்தமானியில் 1000 ரூபா நாட்சம்பளம் உறுதி செய்யப்பட்ட பின்னரும் கூட அது பல இடங்களிலும் வழங்கப்படாது மறுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், வாக்குறுதிகளை வழங்கியவர்கள் இவர்களே! ஆனால், இவர்கள் இன்று கம்பனிகளின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் 1000 ரூபா விடயத்தை திசை திருப்பிவிட்டு, தானும் தன்னைச் சார்ந்த மலையக அரசியல் கோஸ்டிகளும் ஒதுங்கிக்கொள்ளப் பார்க்கிறார்கள். அதேநேரம், மலையகத்தின் எதிர்த்தரப்பு தற்பொழுது நீண்ட விடுமுறையில் இருந்துகொண்டு, மௌனம் சாதித்து வருகின்றது. 

இவ்வாறான ஆட்சியாளர்களினாலும், மலையகத்தின் ஏமாற்று அரசியல்வாதிகளினாலும் மலையக மக்களின் வாழ்வும், அம்மக்களின் எதிர்காலமும் நாசமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானகரமான புள்ளியில் இருந்து மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவே காலம் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 
அதேநேரம், சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியெய்யாத, ஓரளவு கல்வி கற்ற மலையக இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதுடன், இவர்களை முன்னேற்றம் கண்ட சமூகமாக மாற்றிட அடுத்தக் கட்டத்தை நோக்கி வழிநடத்திச் செல்ல நாட்டின் அரசியல் கட்டமைப்பும், பொறிமுறையும் தவறிழைத்துள்ளதால், இவ்விளம் தலைமுறையினர் கார்மெண்ஸிகளிற்கும், புடவைக்கடைகளுக்கும், சில்லறைக் கடைகளுக்கும், சந்தைத் தொகுதிகளுக்கும், ஹோட்டல்களுக்கும், ஸ்பாக்களுக்கும், உடலுழைப்புச் சக்தி தேவைப்படுகின்ற கம்பனிகளுக்கும், பங்களாக்களுக்கும் தொழில் தேடிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 

ஒழுங்குமுறையான பாதுகாப்பு இல்லாது (தங்குமிட வசதி, உணவு, சுகாதாரம், பாலியல் போன்றன) பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளே இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். 

பங்களா எஜமானிக்கோ, எஜமானுக்கோ சேவகம் செய்ய மலையகப் பெண்கள்தான் தேவை என்ற எண்ணக்கரு உருவாகியுள்ளது. இதற்கான ஏஜண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மலையக அரசியற் பின்னணியும் வரலாறு முழுவதும் காணப்படுகிறது. 

இவ்வாறான காரணங்களினாலே ரிஷாடின் வீட்டில் சிறுமி உயிரிழக்க நேர்ந்துள்ளது. இதுவொன்று மாத்திரமல்ல, பல சம்பவங்கள் வெளிவராவிட்டாலும், பல இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. வயது, விபரங்கள் மாற்றப்பட்டு வயது குறைந்தவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூட கதைகள் அடிப்படுகின்றன. 

அதேநேரத்தில், குறித்த சிறுமியின் மரணத்துடன் இனவாதக் கருத்துக்களும் மேலேழுந்தவண்ணம் உள்ளன. இது, குடி, சாதி, இனம், மதம், மொழி சார்ந்த பிரச்சினை கிடையாது. இது இலங்கையில் காணப்படுகின்ற வர்க்க முரண்பாட்டின் விளைவு. 

முதலாளித்துவ அடிவருடி ஆட்சியாளர்களின் ஆட்சிக்கு எதிராக இன, மத, பேதமின்றி மக்கள் இணைந்து துணிந்து போராட முன்வந்திருக்கின்ற வேளையில், மேலேழுகின்ற பிரிவினைவாதக் கருத்துக்கள் மக்களை பிளவுபடுத்தவே செய்யும். 

இவ்விவகாரம் தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்குள் மோதிக்கொள்ளும் விவகாரம் அல்ல. மத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கைப் முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டச் சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும். இது வர்க்கப் முரண்பாட்டின் விளைவு என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஹிஷாலியின் விவகாரத்தின் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் பார்வையையும் இனவாத ரீதியில் திசை திருப்புவதற்கும் ஒரு தரப்பு முயல்கிறது. இதன் இலாபம் யாருக்கென்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்குள் முரண்பாட்டை உருவாக்கிக்கொண்டோ, பெரும்பான்மை சமூகத்துடன் குரோதத்தை வளர்த்துக்கொண்டோ இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாது. தடுத்து நிறுத்தவும் முடியாது. 

ஆகவே, ஏமாற்றுக்காரர்களின் வித்தைகளுக்கு ஏமாந்துப் போகாது ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து இவ்வாறான விடயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும். சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தகுந்த விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் ஹிஷாலியின் மரணத்தின் பின்னணியை அம்பலப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட வேண்டும். இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாவண்ணம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இறுதியாக, இந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் சட்டம் எத்திசைக்கும் வளையும் என்பதையும் சுட்டிக்காட்டி, மக்களுடைய ஆட்சி அதிகாரைத்தை நிலைநாட்ட மக்கள் ஒற்றுமையாகப் போராட வேண்டுமென்று கூறி முடிக்கிறேன். 

நன்றிகள் 
தோழர்.Sadhees Selvaraj

0 commentaires :

Post a Comment