9/16/2021

சமூக நீதிப் போராளி நந்தினி சேவியர் மறைந்தார்


எமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நந்தினி சேவையர் ஐயா அவர்கள் காலமான செய்தி எம்மை துயரத்தில் மூழ்க வைத்துள்ளது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு வெகுஜென அமைப்பின் ஊடாகவும், படைப்பிலக்கிய ஆளுமை வீச்சுடனும் நந்தினி சேவையர் ஐயா நீங்கள் மேற்கொண்ட பணிகள் எமக்கு இன்றும் நினைவில் தேங்கிக்கிடக்கிறது. உங்கள் ஞாபகங்கள் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடத்தோடு’ தொலைந்து போகவில்லை. உங்கள் சமூகப்போராட்ட நினைவுகளும், ஞாபகங்களுமே உங்கள் மறைவிலும் எங்களை முன்னோக்கி நகர்த்திச் செல்ல தூண்டுதலாக என்றும் நிலைத்திருக்கப் போகிறது.

“கடுகரென்ற நோஞ்சான் கிணத்துக்கட்டில ஏறி துலாக்கயித்தைப் பிடிச்சிட்டான் என்றதை அறிந்த பஞசாச்சர வாத்தியார் பிரம்பு தும்பு தும்பாக முறியும் வரை அடித்தானே” அன்று! அப்போ உங்களுக்கு வந்த கோபம்தானே ஐயா ‘நெல்மலிமரப் பள்ளிக்கூடம்’.

அந்த உங்கள் கோபத்தின் விதைகளை எங்களுக்குள்ளும் நீங்கள் விதைத்து வேர்கொள்ள வைத்தே உங்கள் வாழ்வின் பயணத்தை நிறுத்தி விட்டீர்கள்.

எமது சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிய ஒடுக்குமுறைப் போராட்டத்தையும், தீ மூண்ட நாட்களையும் காண்பதற்கான இரண்டு கண்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையையும், சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜென அமைப்பும். நீங்கள் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜென அமைப்புடன் மிகத் தீவிரமாக செயல்பட்டவர். அந்தவகையில் அவ்விரண்டு அமைப்புக்களையும் நினைவில் ஏந்தி நின்று உங்களை வழி அனுப்பி வைக்கின்றோம்.

உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி


0 commentaires :

Post a Comment